சர்ச்சையைக் கிளப்பிய இறைச்சி உண்ணும் விநாயகர் விளம்பரம் : ஆஸ்திரேலியா அரசிடம் இந்தியா கோரிக்கை

Report Print Nivetha in அவுஸ்திரேலியா

விநாயகர் ஆட்டுக்கறி சாப்பிடுவது போன்ற விளம்பரம் தொடர்பாக, குறிப்பிட்ட விளம்பர நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆஸ்திரேலியா அரசிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் இறைச்சி கால்நடை ஆய்வுகள் நிறுவனம் ஆட்டிறைச்சி விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் ஒரு விளம்பரத்தை சமீபத்தில் வெளியிட்டது.

அதில் விருந்து நடக்கும் மேஜையில் விநாயகர், ஏசு, புத்தர், ஜுலியஸ் சீசர் என்று அனைவரும் ஒரே மேடையில் அமர்ந்து பேசுகிறார்கள்.

இறுதியில் இறைச்சி சாப்பிடுவோம் என்று சொல்வது போல் அந்த விளம்பர காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ பதிவுக்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆதாயத்துக்காக இந்து கடவுள்களை கொச்சைப்படுத்துவதா? என்று உலகம் முழுவதிலும் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், விநாயகர் விளம்பரம் தொடர்பாக கேன்பராவில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் ஆஸ்திரேலியா அரசிடம் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகையில், இந்துக்கள் விநாயகரை கடவுளாக வழிபட்டு வருகின்றனர். விநாயகர் ஆட்டுக்கறி சாப்பிடுவது போல் விளம்பரம் வெளியானது இந்துக்களின் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது. எனவே விளம்பரம் எடுத்த நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்த புகார் மீது விசாரணை நடத்தப்படும் என ஆஸ்திரேலிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இதேவேளை, த மீட் மோர் பீபிள் கேன் ஈட், யூ நெவர் லேம்ப் அலோன்' (The meat more people can eat, you never lamb alone), என்ற வாசகம் இந்த விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளது. அதாவது, அதிக அளவிலான மக்கள் ஆட்டிறைச்சியை உண்பதால் நீங்கள் தனித்து விடப்படமாட்டீர்கள் என்ற பொருளில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விளம்பரத்தில், விநாயகர், இயேசு, புத்தர், தோர் மற்றும் சீனாவின் குவானியன் என பல்வேறு மதங்களின் தெய்வங்கள் மற்றும் புராண கதைமாந்தர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதை காணலாம்.

இதுபற்றி சமூக ஊடகங்களில் பலவிதமான கருத்துக்களும் விமர்சனங்களும் எதிர்வினைகளும் உலா வருகின்றன