கடந்த ஆட்சியில் 53 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது

Report Print Arivakam in சமூகம்
advertisement

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றம் என்ற பெயரில் கடந்த ஆட்சிக்காலத்தில் சுமார் 53 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றம் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றபோதும் கடந்த ஆட்சிக்காலத்தில் தற்போதும் தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

குறித்த மன்றத்தினை வடக்கு மாகாண கல்வி அமைச்சிடம் ஒப்படைக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற பல்வேறு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது.

இதேவேளை இதற்கான நிதியொதுக்கீடு முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இது தொடர்பான முழுமையான விளக்கத்தை கோரி கரைச்சி பிரதேச செயலாளருக்கு கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தார்.

இதனையடுத்து வடக்கு மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை கடந்த டிசம்பர் மாதம் கடிதம் ஒன்றினையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இது தொடர்பான கணக்கு நடைமுறைகள் எவையும் பிரதேச செயலகத்தில் இல்லை. இந்த மன்றத்திற்கு பிரதேச செயலகம் எந்த நிதிப்பங்களிப்பையும் செய்யவில்லை எனவும் கரைச்சிப்பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தின் நிர்வாகத்தை சேர்ந்த தலைவர் எனக்குறிப்பிட்டு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆகியோருக்கு நேற்று முன்தினம் (09) கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் 2011ம் ஆண்டு என்றிப் திட்டத்தின் கீழ் முதற்தடவை ஐந்து மில்லியன் ரூபாவிலும் அதன் பின்னர் 4.7 மில்லியன் ரூபாவிலும் குறித்த மன்றம் இயங்கி வரும் கட்டடம் கூரையின்றி காணப்பட்ட நிலையில் புனரமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு என்றிப் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 9.7 மில்லியன் ரூபா நிதி தொடர்பில் பிரதேச செயலக அனுமதிகள் எதுவுமின்றி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதனை விட அபிவிருத்தி என்ற போர்வையில் பெருமளவான நிதி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தில் நிறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

advertisement

Comments