வைத்தியசாலைகளின் கழிவு முகாமைத்துவத்தை அபிவிருத்தி செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை

Report Print Thileepan Thileepan in சமூகம்
advertisement

வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான வைத்தியசாலைகளின் கழிவு முகாமைத்துவ பொறிமுறையை அபிவிருத்தி செய்ய உதவுமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

60 மில்லியன் யூரோ செலவில் அமைக்கப்பட்டுள்ள கழிவு முகாமைத்துவ தொகுதி உத்தியோகபூர்வமாக வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இந்தக்கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் முன்வைத்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் நீரினால் பரம்பலடையும் நோய்களின் தாக்கம் கூடிய மாகாணமாக வடக்கு மாகாணம் திகழ்கிறது.

அதிலும் மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்களில் நிலத்தடிநீர் மாசடைவதால் நீரினால் பரம்பலடையும் நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இவ்வாறான திட்டங்களின் மூலம் தொற்று நோய்களின் தாக்கத்தை குறைக்கலாம்.

இதுவரைக்காலமும் வைத்தியசாலை கழிவுகள் பாதுகாப்பற்ற முறையிலேயே அகற்றப்பட்டு வந்துள்ளது.

தற்போது இதற்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த கழிவுமுகாமைத்துவ திட்டத்தின்மூலம் சுற்றுசூழல் மாசடைவது தடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அதனை நடைமுறைப்படுத்திய யுனொப்ஸ் நிறுவனத்திற்கும் வடக்கு மாகாண மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதேவேளை, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் என்ற வகையில் வடக்கின் ஏனைய மாவட்ட வைத்தியசாலைகளிலும் இவ்வாறான கழிவுமுகாமைத்துவ தொகுதிகளை அமைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவி செய்யவேண்டும் என மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்திலிங்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர், ஐக்கியநாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி, யுனொப்ஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் றோகணபுஸ்பகுமார, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ம.கிருபாசுதன், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் மு.மகேந்திரன் மற்றும் வைத்தியர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.

advertisement

Comments