தமிழ் மக்கள் மத்தியில் பிளவினை ஏற்படுத்தும் முயற்சிகளை ரணில் மேற்கொள்கின்றாரா ?

Report Print Kumar in சமூகம்

ரணில் விக்ரமசிங்க மீண்டும் தமிழ் மக்களுக்குள் பிளவொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளாரா என்ற சந்தேகம் இன்று தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

ரணில் ஆட்சிக்காலத்திலேயே விடுதலைப்புலிகள் கட்சிக்குள் பிளவு ஏற்படுத்தப்பட்டது. இன்று அதே ரணில் ஆட்சியிலேயே எழுக தமிழ் மற்றும் கருணா கட்சி ஆரம்பிக்கும் நிலையேற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் வருடாந்த மெய்வல்லூனர் போட்டி இன்று இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் த.அருள்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர், எமது மக்கள் அனுபவித்த துன்பங்கள் இழப்புகள் பற்றி நாங்கள் நன்கு அறிவோம்.

சாதாரண தரம் கற்கும் மாணவர்கள் முதல் உயர்தரம் கற்கும் மாணவர்கள் வரை கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாட்டில் என்ன நடந்தது என்பதை கண்கூடாக பார்த்துள்ளனர்.

எமது நாடு 1948ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த பின்பு எமது இனமானது அடக்கி ஒடுக்கப்பட்டது. எமது உரிமைகள் பறிக்கப்பட்டது.

அதன் மூலம் எமது சமூகமானது உரிமைகளை வென்றெடுப்பதற்காக அகிம்சை ரீதியான போராட்டத்தில் இறங்கியது. அதன் மூலம் உரிமைகளை வென்றெடுக்க முடியாமல் போனதால் ஆயுத ரீதியாக எமது போராட்டத்தை தொடர்ந்தோம்.

ஆயுதபோராட்டத்தின் போது எமது குழுக்களுக்குள் ஏற்பட்ட சில மோதல்களினால் போராட்டத்தில் பின்னடைவை சந்தித்தோம். அதன் பின்பு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரே குழுவாக எமது இனத்தின் விடுதலைக்காக தொடர்ந்து போராடினார்கள்.

2004ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்களால் மிகத் தந்திரமாக கருணா அம்மான் என்று அழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனைக்கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இரண்டாக உடைக்கப்பட்டது. சதியின் மூலம் எமது போராட்டம் சின்னாபின்னமாக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு எமது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஒன்றாக ஒருகொடியின் கீழ் போராடிக்கொண்டிருந்தார்கள்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் தமழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைக்க முடியவில்லை. இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நல்லாட்சி அரசாங்கமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு முயற்சிக்கின்றதோ என்கின்ற சந்தேகம் எமக்குள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைக்க முடியாது என்று நினைத்து மீண்டும் கருணா அம்மானை மீண்டும் கொண்டு வந்து அரசியல் ரீதியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் மக்களையும் உடைப்பதற்கு சதி நடக்கின்றதா என்று எண்ணத் தோன்கின்றது.

காரணம் யாதெனில் அன்று பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவினால் ஆயுதப் போராட்டத்திலிருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உடைக்கப்பட்டது.

இன்று அதே மனிதன் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராக இருக்கின்ற இந்தக் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுக தமிழ் நிகழ்வு நடைபெற்ற மறுதினமான பெப்ரவரி 11ஆம் திகதியன்று தமிழ் மக்கள் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய கட்சியொன்றை உருவாக்குவதற்காக செயற்பட்டுவருகின்றார்.

ஒரு தமிழ்க் கட்சி பெரிய கட்சியுடன் சேர்வதாக பிரபல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அந்த தமிழ்க் கட்சி 2015ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற காலத்தில் மூட்டப்பூச்சி சின்னத்தில் நாம் திராவிடர் எனும் பெயருடன் தமிழ் மக்களின் வாக்குகளை சிதைப்பதற்காக உருவாக்கப்பட்டது.

பதிவு செய்யப்படாத இரண்டு பேர் கொண்ட அந்தக் கட்சியை தன்னுடன் சேர்த்துக்கொண்டு தமிழ் மக்களை அரசியல் ரீதியாக பிரிப்பதற்கு இவர்கள் முயற்சிக்கின்றார்களோ என்ற சந்தேகம் தோன்றுகின்றது.

அகிம்சைப்போராட்ட காலத்திலும் ஆயுதப் போராட்ட காலத்திலும் தற்போது நடக்கும் ராஜதந்திர போராட்ட காலத்திலும் எமது மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ளக் கூடாது, சுயாட்சி நடக்கக்கூடாது,

இணைந்த வடக்கு கிழக்கில் எங்களை நாங்கள் ஆள்கின்ற சுயாட்சி உருவாகி தமிழ் மக்கள் நிம்மதியாக வாழக்கூடாது என்று நினைக்கின்ற பேரினவாதிகக்கு ஆதரவாக இங்கு இவர்கள் புல்லுருவிகளாக செயற்பட்டு வருகின்றார்கள்.

எமது மக்களுக்காக அவர்கள் இழந்த உரிமைகள்,சொத்துக்களுக்காக உயிர்த்தியாகம் செய்த எமது உறவுகளின் ஆத்ம சாந்திக்காக எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை பெற்றுக்கொள்ளும் வகையிலான ஒரு தீர்வு வரும்வரை நீங்கள் சற்று அமைதியாக இருங்கள் என உங்களை நான் கேட்டுக்கொள்கின்றேன்.

ஒரு காலத்தில் தீவிரமாக எமது போராட்டத்தில் ஈடுபட்டவர் ஏதோ ஒரு வழியில் அதிலிருந்து உடைத்தெடுக்கப்பட்டவர் இன்று பெரிதளவிலான பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லாத இந்தக் காலத்தில் எமது மக்களுக்காக அமைதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Comments