கூட்டமைப்பு உறுப்பினர் சிலர் வேறு பாதையில் பயணம்! கிழக்கு அமைச்சர் குற்றச்சாட்டு

Report Print Navoj in சமூகம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே இருக்கின்றவர்கள் சிலர் பேசத் தொடங்கியிருக்கின்றார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கிருஸ்ணப்பிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குகனேசபுரத்தில் சனசமூக நிலைய கட்டடம் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று மக்கள் முன்னே வருகின்றவர்கள் எங்களோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று இருந்து விட்டு இப்போது வேறு பாதைக்கு சிலர் செல்கின்றார்கள் இதை மக்கள் நன்கு அறிவார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே இருக்கின்றவர்கள் சிலர் பேசத் தொடங்கியிருக்கின்றார்கள்.

அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் இந்த சமுதாயத்திற்குத் தலைமை தாங்கக் கூடியவர்களா?

இவர்கள் பேச்சுவார்த்தை மேடைக்குச் சென்று யாருடன் பேச முடியும்?

எமது பிரச்சினைகளை சொல்லி வைக்கக் கூடிய அளவிற்கு இவர்களை அவர்கள் மதிப்பார்களா? என்பது பற்றி எமது மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இவர்கள் யார், இவர்களின் வரலாறு என்ன என்பது பற்றி அவர்களுக்குத் தெரியும். இந்த வரலாறு உடையவர்களை பேச்சுவார்த்தை மேடைக்கு ஜனாதிபதியோ பிரதமரோ அங்கீகரிக்கப் போவதில்லை.

ஏனெனில் இந்த தீர்வுக்கு ஜனாதிபதி, பிரதமர் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கியமானவர்கள். அவர்கள் யார் பேச்சைக் கேட்பார்கள் என்பதை நாம் அறிந்து அந்தப் பேச்சைக் கேட்கக் கூடிய தலைமைத்துவத்திற்குத் தான் நாங்கள் ஆதரவு வழங்க வேண்டும்.

அதே நேரத்தில் இவ்வாறு புரட்சி செய்யப் புறப்பட்ட எமது சகோதரர்கள். அவர்களும் எமது சகோதரர்கள் தான்.

அவர்களுக்கு நாம் சொல்வது ஒன்று தான் ஒரு தலைமையின் கீழ் செல்வோம், பெறக்கூடிய அனைத்தையும் பெறுவோம், அதன் பின்னர் வேண்டுமாயின் தங்கள் செயற்பாடுகளை மேற்கொள்ளுங்கள். ஆனால் இப்போது இந்தச் செயற்பாடுகளை குழப்பிவிடக் கூடாது.

எமக்குள் தீவிரத் தன்மை என்பது வருவதுண்டு ஆனாலும் இதனை விட்டுவிட்டுச் சென்றுவிட்டால் இதன் மூலம் நாம் பலவீனப்படுவோம்.

ஏனெனில் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். எனவே இவ்வாறான விதண்டா வாதங்கள் செய்யாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அடையாளத்தில் வந்து பதவிகளைப் பெற்ற எமது சகோதரர்கள் இவ்வாறு செயற்படாதீர்கள். ஒன்றிணையுங்கள்.

நாம் இதற்குள்ளேயே செயற்பட வேண்டும். எங்களுக்குத் தெரியும் பல விடயங்கள் அவர்கள் சொல்வதைச் செய்ய முடியாமல் தான் இருக்கின்றது.

ஆனாலும் கூட காலம், இடம், நேரம் அறிந்து செயற்பட வேண்டும் என்கின்ற வகையில் எமது தலைமைத்துவம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

Comments