தீர்க்க முடியாத பிரச்சினைகள் தான் எங்களிடம் வருகின்றன : சிவசக்தி ஆனந்தன்

Report Print Thileepan Thileepan in சமூகம்

கிராம சேவையாளர், பிரதேச செயலாளர், அரசாங்க அதிபரிடம் சென்று தீர்க்க முடியாத பிரச்சினைகள் தான் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் எங்களிடம் வருகின்றது என வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அரச அலுவலர்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டமாகிய “நில மெஹெவர” தேசிய வேலைத்திட்டம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியாவில் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் பொது மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா, மன்னார் மாவட்ட அரச உத்தியோகத்தர்களை அதிகளவில் ஒரே இடத்தில் சந்திப்பது இதுதான் முதல் தடவையாக இருக்கும். நீங்கள் எல்லோரும் போர்க்காலத்திலும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் மிக நெருக்கடியான காலத்தில் கூட மக்களுக்காக பணியாற்றி பெரியதொரு அனுபவத்தை பெற்றவர்களாக இருக்கின்றீர்கள்.

தேவைகள் அதிகமாக இருக்கின்ற எங்களது பிரதேசம் போரினால் பாதிக்கப்பட்டது என்ற அடிப்படையிலே மக்களிற்கான தேவைகள் நிறையவே இருக்கின்றன.

ஆனால் அத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கான தடைகளை நீங்களும் நாங்களும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம்.

எமது மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் உள்ளூராட்சி மன்ற வீதிகள் மிகமேசமான நிலையில் புனரமைக்க வேண்டிய தேவையுள்ளது. வீட்டுத்திட்டம், வாழ்வாதாரம், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பெண்களை தலைமையாக கொண்ட ஆயிரக்கணக்கான பெண்கள், காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகளின் குடும்பம் உட்பட நிறைய தேவைகள் உள்ளன.

இப்பணிகளை செய்வதிலேயே மக்கள் மத்தியில் நீங்களும், நாங்களும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மிக கடினமானது. மக்களுக்கும், எங்களுக்கும் இடையிலே பாரிய இடைவெளி இருக்கின்றன.

அவர்கள் எதிர்பார்க்கின்ற விடயங்கள், தேவைகளை ஒரு கட்டத்திலே பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உங்களுக்கும், எங்களுக்கும் கடுமையான விமர்சனங்களிற்கு உள்ளாக வேண்டிய தேவை இருக்கின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் எங்களிடம் வருகின்ற பிரச்சினைகள் தீர்க்க முடியாத பிரச்சினைகள் தான் வருகின்றன. கிராம சேவையாளர், பிரதேச செயலாளர், அரசாங்க அதிபரிடம் சென்று தீர்க்க முடியாத பிரச்சினைகள் தான் எங்களிடம் வருகின்றது.

சில வேளைகளில் இலகுவாக தீர்க்கப்படக்கூடிய பிரச்சினையாக இருந்தும் கூட எங்களிடம் வர வேண்டிய நிலைமை இருக்கின்றது. கிராம மட்டத்தில் இருக்கின்ற மக்களை அனுசரித்து அவர்களின் மனங்கள் நோகாத வகையிலும், அவர்களின் வரிப்பணத்தில் எங்களது சம்பளத்தை பெறுகின்றோம் என்ற ரீதியிலும், அவர்களிற்கான பணிகளை ஆற்ற வேண்டிய பாரியபொறுப்பு எங்களுக்கு காணப்படுகின்றது என தெரிவித்தார்.

மேலும், பல நெருக்கடிகள், பல சவால்கள் இருக்கின்றன. எல்லோரையும் எல்லா சந்தர்ப்பத்திலும் திருப்திப்படுத்த முடியாத சந்தர்ப்பம் இருந்தாலும் முடிந்தளவிற்கு போரினால் பாதிக்கப்பட்ட எங்களது மக்களிற்கு ஏற்ற பணிகளை இணைந்து செய்வோம் என சிவசக்தி ஆனந்தன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Comments