தொலைக்காட்சி நாடகங்களால் சிந்தனைகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன : ஸ்ரீகந்தநேசன்

Report Print Thamilin Tholan in சமூகம்

தொலைக்காட்சி நாடகங்களால் மாணவர்கள், இளையோர்கள், முதியோர்கள் எனப் பல்வேறு தரப்பினரதும் சிந்தனைகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளதாக இளம் எழுத்தாளரும், ஆசிரியருமான பெ. ஸ்ரீகந்தநேசன் தெரிவித்துள்ளார்.

பெ. ஸ்ரீகந்தநேசன் எழுதிய "நான் ஓர் எழுத்தாளன்" கவிதை நூல் வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத் தூதுக் கலையகத்தில் நேற்று (19) இடம்பெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தற்காலத்தில் மாணவர்கள் மத்தியிலும் சமூக மட்டத்திலும் வாசிப்புத் திறன் மிக மிகக் குறைந்து செல்கிறது.

வாசிப்புத் திறன் இல்லாத காரணத்தால் சமூகத்தின் யதார்த்தமான பண்புகளை வெளிப்படுத்த முடியாதுள்ளது.

தமிழ் மொழி வரலாற்றின் அடிப்படையில் பார்க்கும் போது ஐரோப்பியரின் வருகையைத் தொடர்ந்து நவீன இலக்கியங்களின் வருகை ஓரளவு தாக்கம் செலுத்தினாலும் தொலைக்காட்சி நாடகம், சினிமா என்பவற்றின் உருவாக்கத்தைத் தொடர்ந்து இலக்கியங்களும் ஜனரஞ்சகப் போக்குடையதாக மாறியது.

இன்றைய காலக்கட்டத்திலும் ஜனரஞ்சகப் போக்குடைய நூல்களை வாசிப்பதற்கு ஏராளமான வாசகர்கள் காணப்படுகின்றனர்.

ரமணிச் சந்திரன் போன்றோர்களின் நூல்களை வாசிப்பதற்குப் பலரும் போட்டி போடுகிறார்கள்.

2008 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப் பகுதியில் போரியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், யதார்த்த ரீதியாகவும் , உள்ளார்ந்த ரீதியாகவும் நான் நேரடியாக பார்த்த விடயங்களையும், வாழ்க்கையில் அனுபவித்த அனுபவங்களையும் என்னால் முடிந்த கவிதை மொழியில் நூலாக வெளியீடு செய்துள்ளேன் என மேலும் தெரிவித்தார்.

Comments