ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆஜராகாததால் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணம் தயாரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு திஸ்ஸ அத்தநாயக்க மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நீதி மன்றுக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

வழக்கு முற்றாக முதலாம் மற்றும் இரண்டாம் சாட்சியாளர்களை அடிப்படையாக கொண்டுள்ளதால் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்ற காரணத்தினால் வழக்கை விசாரிக்க வேறு ஒரு திகதியை வழங்குமாறு கோரினர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரே வழக்கின் முதலாம் மற்றும் இரண்டாம் சாட்சியாளர்கள் எனவும், பணி சுமை காரணமாக அவர்களால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என முன்கூட்டியே அறிவித்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூலை 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இரகசிய உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக கூறி போலி ஆவணம் ஒன்றை பகிரங்கப்படுத்திய குற்றச்சாட்டில் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டு கடந்த ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைத்ததுடன் பின்னர் பிணையில் விடுதலை செய்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகி சில தினங்கள் மாத்திரம் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments