22ஆவது நாளாகவும் தொடரும் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் 22ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

குறித்த போராட்டம் வேலையற்ற பட்டதாரிகளால் காரைத்தீவு விபுலானந்தா சதுக்கமருகே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த பட்டதாரிகள்,

கிழக்கில் 4500 வேலையற்ற பட்டதாரிகள் 2012 தொடக்கம் 2016 வரையான ஆண்டு காலப்பகுதியில் இருக்கின்றனர். 22வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சத்தியாக்கிரக போராட்டமானது நியமனம் கையில் கிடைக்கும் வரை கைவிடப்படமாட்டாது.

வேலையில்லா பட்டதாரிகளாகிய நாம் அரசாங்கத்திடம் அண்மைக்காலமாக வேலை வேண்டியும், எமது வருங்கால பட்டதாரிகளுக்கான வேலைச்சூழலையும் ஏற்படுத்தி தருமாறும், எமது நாட்டின் ஜனநாயக முறையில் போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.

இதனை கொச்சைப்படுத்துவோர், விமர்சிப்போர் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள்

  1. நாம் பல இன்னல்களை சந்தித்து கல்வி கற்றும் விடியா வாழ்வுவோடும், முடியா போராட்டத்தோடும் நாம் இருக்கிறோம்.
  2. சுமார் 4500 சிறுபான்மை பட்டதாரிகளின் குடும்ப பொருளாதாரம் முடக்கப்படுகிறது.
  3. இது எமது உரிமை.
  4. இந்த போராட்டம் எதிர்கால பட்டதாரிகளாகிய உங்களின் பிள்ளைகளுக்குமே.
  5. எமது பிரதேசங்களில் எமது திறமைக்கேற்ற வேலைவாய்ப்பு சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
  6. கலைப்பீடத்தை புறக்கணிக்கக் கூடாது போன்றவையாகும்.

எனவே விமர்சிப்பதை விடுத்து உங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும், எம்மை அர்ப்பணித்து போராடுகிறோம் என்பதை புரிந்து ஆதரவு தாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், காரைதீவு விபுலானந்தா சதுக்கமருகே மூவின பட்டதாரிகளும் தொடர்ந்து 22 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டும் இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லையெனவும், நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வரை நாம் போராட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை எனவும் பட்டதாரிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் ஒத்திவைப்புப் பிரேரணையைக் கொண்டு வரவுள்ள நிலையில் இது தொடர்பில் மாணவர்களால் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments