விடுதலைப் புலிகள் காலத்தில் காட்டில் சுதந்திரமாக வாழ்ந்தோம் - ஆதிவாசியின் ஆதங்கம்

Report Print Reeron Reeron in சமூகம்

மட்டக்களப்பு, கிரான் தெற்கு, வாகரை வடக்கு பிரதேச பகுதியிலுள்ள ஆதிவாசிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு தங்களின் வாழ்க்கையை வளமாக்குமா? என்ற கேள்விக்குறிக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருவதாக கிரான் பிரதேச செயலக பகுதியிலுள்ள மினுமினுத்தவழி மற்றும் அக்குராணை பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆதிவாசி வைரமுத்து நடராசா கருத்து தெரிவிக்கையில்,

நாட்டின் முக்கிய இடத்தில் இருக்கும் ஆதிவாசிகளாகிய தங்களின் வாழ்க்கை பல பிரச்சினைகளுக்கு மத்தியில் காணப்படுகின்றது.

விடுதலைப் புலிகள் இருக்கும் காலங்களில் மிகவும் சந்தோசமான முறையில் தங்களுக்குத் தேவையான காட்டு விலங்குகள், காட்டுத் தேன் போன்ற பல விடயங்களை சுதந்திரமாக செய்துவந்திருந்தோம்.

எனினும், தற்போது அனைத்துக்கும் சட்டம் விதிக்கின்றார்கள். இதன் காரணமாக ஆதிவாசிகளுக்குரிய பல பாரம்பரிய உணவுகளைக்கூட பெற்றுக் கொள்ள முடியாத அவல நிலையில் தற்போது இருக்கின்றோம்.

நல்லாட்சி என்கின்ற அரசு ஆதிவாசிகள் வசிக்கும் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதில் பின் நிற்பதாகவும், எவ்விதமான உதவிகளும் பெற்றுத்தரவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை வாகரை பிரதேசத்தில் குஞ்சங்குளம் போன்ற பகுதியிலும் ஆதிவாசிகள் வசித்து வருகின்றார்கள். அங்கு நல்லதம்பி வேலாயுதம் எனும் ஆதிவாசிகளின் தலைவர் வசிக்கின்றார்.

காலப் போக்கில் ஆதிவாசிகளின் பல்வேறுபட்ட கலை, கலாச்சார முறைமைகள் பாதிக்கப்படும் நிலமை காணப்படுகின்றது.

மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி கூட்டங்களை நடாத்தும் அரச மற்றும் அரசியல்வாதிகள் அடிப்படை வசதிகள் இன்றி இருக்கும் ஆதிவாசிகளின் பிரதேசங்களையும் தங்களின் அபிவிருத்தி திட்டங்களுக்குள் உள்வாங்க வேண்டும்.

ஆதிவாசிகள் என்றதும் அரச மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்கு எங்கள் குலங்களை அன்போடு அழைக்கும் அதிகாரிகள், அதே கரிசணையை எங்கள் பிரதேசங்களில் காணப்படும் குறைபாடுகள் மீதும் காட்ட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Comments