கொழும்பில் டெங்கு நோயை ஒழிக்கும் விசேட வேலைத்திட்டம் : பொதுமக்களுக்கும் அழைப்பு

Report Print Siddharth in சமூகம்

கொழும்பில் இதுவரையான காலப்பகுதியில் 1098 பேர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுள் எண்பது வீதமானோர் டெங்கு நோய்க்கு ஆளாகியுள்ளதாக பொது சுகாதாரத்துறை தலைமை மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

நாட்டில் அண்மைக்காலமாக பரவிவரும் டெங்கு நோய் தொடர்பான விசேட விழிப்புணர்வை வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கொழும்பில் மட்டுமல்லாது நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக இலங்கை மட்டுமின்றி சிங்கப்பூர்,மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகிளிலும் 23000இற்கும் மேற்பட்டோர் டெங்கு நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே கொழும்பில் டெங்கு நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

இதன் காரணமாக காலை 5 மணிக்கும், மாலை 5 மணிக்கும் டெங்கு நோய் ஒழிப்பிற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இராணுவத்தினரின் உதவியுடன் கொழும்பு நகரம் முழுவதும் சுத்திகரிப்பு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

இத்திட்டத்திற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகக்குறைவாகவே காணப்படுகின்றது. இனிவரும் காலங்களில் பொதுமக்களின் ஒத்துழைப்பு எமக்கு மிகவும் அவசியம்.

மூன்று நாட்களுக்கும் அதிகமாக காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் உடனடியாக வைத்தியரை நாடி உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments