வலிகளைச் சுமந்து போராடி வரும் எம்மை முதலமைச்சர் சந்திக்காமல் இருப்பது ஏன்? பட்டதாரிகள் ஆதங்கம்

Report Print Thamilin Tholan in சமூகம்
advertisement

பல்வேறு வலிகளைச் சுமந்து போராடி வரும் எம்மை முதலமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடாமல் இருப்பது ஏமாற்றமளிப்பதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கக் கோரிக் கடந்த மாதம் 27 ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் ஆரம்பித்த கால வரையற்ற போராட்டம் இன்று (20) 22 ஆவது நாளாகவும் தீர்வின்றி இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பில் எழுத்துமூலமான உறுதிமொழிகள் எவையும் இதுவரை வழங்கப்படாத நிலையில் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இதுவரை காலமும் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக அமைதி வழியில் போராடி வந்த வேலையற்ற பட்டதாரிகள் 22 நாட்களாகியும் தமக்குரிய தீர்வு முன்வைக்கப்படாத காரணத்தால் எதிர்வரும் நாட்களில் தமது போராட்ட வடிவத்தை மாற்றுவது தொடர்பாக இன்றைய தினம் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

தாம் எதிர்நோக்கியுள்ள அவல நிலை தொடர்பில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஆதங்கம் வெளியிடுகையில்,

நாங்கள் எமது கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 22 நாட்களாகப் பல்வேறு வலிகளைச் சுமந்து போராடி வருகின்றோம்.

இந்த நிலைமையில் முதலமைச்சர் சந்தித்துக் கலந்துரையாட வில்லை.

இதுவரை எங்களுடைய வாக்குகளைப் பயன்படுத்தி உங்களை எங்கள் தலைவர்களாகவும், பிரதிநிதிகளாகவும் தெரிவு செய்துள்ள நிலையில் நீங்கள் அசட்டையீனமாகச் செயற்படுவது முறையா? எனவும் கேட்டுள்ளனர்.

நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கக் கோரிக் காலவரையற்ற போராட்டத்தை நடாத்தி வருகிறோம்.

நாங்கள் எமது கவனயீர்ப்புப் போராட்டத்தை யாரை நோக்கிச் செய்கிறோமோ அவர்கள் எங்கள் போராட்டத்தைத் திரும்பிக் கூடப் பார்க்காதது தான் வேதனை.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

குறிப்பாக வடமாகாண சபையின் கவனத்திற்கு நாம் எமது பிரச்சினையை எடுத்துச் சென்ற போது கால அவகாசம் கேட்டிருந்தார்கள்.

நாங்கள் உரிய கால அவகாசம் வழங்கிய போதும் இதுவரை எந்தவொரு சாதகமான பதிலும் வழங்கப்படவில்லை.

வடக்கு ஆளூநரைச் சந்தித்து எமது பிரச்சினைகளை எடுத்துச் சொன்ன போது அவரும் கால அவகாசம் கேட்டிருந்தார்.

ஆனால், எமது வேலைவாய்ப்புத் தொடர்பில் அவர்களும் ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

பிரதமரைக் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடிய போது மூன்று வார கால அவகாசம் கேட்டிருந்தார். ஆனால், இரண்டு வார காலம் கழிந்த போதும் எமது பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை.

பட்டதாரிகளான எங்கள் வாழ்க்கையைத் தெருக்களில் கழிக்க வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டுள்ள சூழலில் அடுத்து வரும் மாணவ தலைமுறையினர் பல்கலைக்கழகம் சென்று எவ்வாறு படித்து மேன்மை நிலையை அடைய முடியும் என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.

வடமாகாணம் கல்வியில் உயர்ந்து நிற்கிறது என மார்தட்டிச் சொல்கிறார்கள்.

படித்துப் பட்டம் பெற்றுள்ளவர்கள் வேலையில்லாமல் தெருக்களில் வாடி நிற்கின்ற நிலைமையில் எதிர்காலத்தில் படித்த மனிதர்களை எவ்வாறு உருவாக்க முடியும்?

பலரும் எங்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். ஆனால், எங்களுக்கான வேலைவாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதற்கு எவருமே தயாராகவில்லை எனவும் அவர்கள் மேலும் குற்றம் சாட்டியுள்ளனர்.

advertisement

Comments