இலங்கைக்குக் கால அவகாசம் வழங்குவது சரியா? தவறா? யாழ். மக்கள் என்ன சொல்கிறார்கள்.. (ஒரு நேரடி ரிப்போர்ட்)

Report Print Thamilin Tholan in சமூகம்

ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பான விடயம் சமகாலத்தில் இலங்கை அரசியலில் ஒரு முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக் கூறலுக்கு சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் கடந்த இரண்டு வருடங்களாக அதற்கான எந்தவொரு முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கையில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமே இல்லை என்பதை மீண்டும் மீண்டும் அரசாங்கத்தின் நிலைப்பாடுகளாக வெளிப்படுத்தி வரும் ஒரு சூழலில் தான் பொறுப்புக் கூறலுக்காக இலங்கை அரசாங்கம் மேலும் இரண்டு வருட கால அவகாசம் கேட்டிருக்கின்றனர்.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் தமிழ்மக்களின் சுவீகரிக்கப்பட்ட பல நூற்றுக் கணக்கான காணிகள் வட-கிழக்கில் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்னமும் முன்னேற்றகரமான எந்தவொரு முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை.

இவ்வாறான நிலையில் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நாளைய தினம் நிறைவேற்றப்படவுள்ளது.

இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கும் வகையில் நிறைவேற்றப்படவுள்ள குறித்த தீர்மானத்திற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளது.

ஆனால், தமிழ்மக்கள் பேரவை , வடமாகாண சபை, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி ,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புக்கள் இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதைக் கடுமையாக எதிர்த்துள்ளன.

போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்மக்கள் மத்தியிலும் இலங்கைக்கு கால அவகாச நீடிப்பு வழங்குவதால் பயனேதுமில்லை என்ற பொதுவான கருத்தே இருந்து வருகிறது.

கால அவகாச நீடிப்புத் தொடர்பில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் அரசியல் சார்ந்து பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் சூழலில் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்குவது சரியா? தவறா? என்பது தொடர்பில் சாதாரண மக்களின் மன நிலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

Comments