பூதவுடல் நீத்தாலும் ஈழத்தின் பத்திரிகை துறை வரலாற்றில் அமரர் சிவப்பிரகாசம் புகழுடன் திகழ்வார்!

Report Print Gokulan Gokulan in சமூகம்

கொழும்பில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைகளில் இன்று வரை தனக்கென தனி முத்திரை பதித்து வரும் வீரகேசரி பத்திரிகையில் 1966ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டு வரை பிரதம ஆசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரிய கந்தசாமி சிவப்பிரகாசம் தனது 81ஆவது வயதில் கடந்த 14ஆம் திகதி அமெரிக்காவின் வெர்ஜீனியா நகரில் இயற்கை எய்தினார்.

இவரது பூதவுடல் 16ஆம் திகதி Demaine Funeral Home, 10565 Main Street, Fairfax, VA 22030 என்ற முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு வெர்ஜீனியாவில் மரணச்சடங்குகள் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மாதகலை பிறப்பிடாகக் கொண்ட சிவப்பிரகாசம் பேராதனை பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்று பட்டதாரி ஆனார்.

அக்கால கட்டத்தில் பிரதான தமிழ் பத்திரிகைகளாக கொழும்பிலிருந்து வீரகேசரியும், தினகரனும் வெளிவந்து கொண்டிருந்தன.

பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவின் தந்தையார் எஸ்மன்ட் விக்கிரமசிங்க அப்போது தினகரன் பத்திரிகையை வெளியிட்டு வந்த 'லேக் ஹவுஸ்' நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தார்.

சிவப்பிரகாசம் முதலில் தினகரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றி வந்தார்.

பின்னர் எஸ்மன்ட் விக்கிரமசிங்க வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பினையும் ஏற்றுக் கொண்டார்.

அதனால் தினகரன் பத்திரிகை அலுவவலகத்தில் பணியாற்றிய க. சிவப் பிரகாசம்,ரி.சிவப்பிரகாசம், பாலச்சந்திரன் ஆகியோரை வீரகேசரி அலுவலகத் தில் பணிபுரிய அழைத்து வந்தார்.

க. சிவப்பிரகாசத்தினை உதவி பிரதம ஆசிரியராக நியமித்தார். அக்காலத்தில் கே.வி.எஸ்.வாஸ் என்பவர் வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பணி யாற்றிக் கொண்டிருந்தார்.

சில காலத்தின் பின்னர் வாஸ் அவர்கள் ஆசிரியப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் க.சிவப்பிரகாசம் பிரதம ஆசிரியர் பதவியைப் பொறுப் பேற்று திறம்பட நடத்தி வந்தார்.

அவரின் கீழ் பணியாற்றி வந்த செய்தி ஆசிரியர் டேவிட் றாஜ், மற்றும் உதவி ஆசிரியர்களாகிய எம்மையும், நிருபர்கள், ஒப்பு நோக்காளர்கள் அனைவரையும் கண்ணியமாகவும், கண்டிப்புடனும் நடத்தினார்.

இவரது திறமான நிர்வாகம், ஆணித் தரமான ஆசிரியத் தலையங்கம், சுடச் சுட வெளி வந்த செய்திகள் ஆகியவற்றினால் வீரகேசரி படிப்படியாக வளற்சி அடைந்து இலங்கையில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைகளில் முதலாவது பத்திரிகை என்ற பெயரினையும் புகழையும் பெற்றது.

அத்துடன் இவர் மித்திரன் என்ற மாலைப் பத்திரிகையினையும் ஆரம்பித் தார். அப்புகழ் இன்று வரை தொடர்ந்து நிலைத்து நிற்கின்றது.

பூதவுடல் நீத்தாலும் ஈழத்தின் பத்திரிகை துறை வரலாற்றில் அமரர் சிவப்பிரகாசம் என்றென்றும் புகழுடம்புடன் திகழ்வார் என்பதில் ஐயமில்லை.

Comments