த.தே.கூட்டமைப்பே எமது போராட்டத்திற்கு வெற்றியை பெற்றுத்தர வேண்டும்

Report Print Kumar in சமூகம்

தனித்துவக் கட்சியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே எமது போராட்டத்திற்கான வெற்றியைப் பெற்றுத் தருவதோடு அதற்கான அழுத்தங்களை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 59ஆவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வடகிழக்கில் உள்ள தாம் கல்வியைப் பெறுவதில் கடந்த காலங்களில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியதுடன் பட்டக்கல்வியையும் பெரும் கஷ்டங்களுடன் பூர்த்தி செய்துள்ள நிலையில் இன்று தொழில்வாய்ப்பினை பெறுவதற்கு வீதியில் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் வடகிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பட்டத்தினை பூர்த்தி செய்தவுடன் தொழிலை தெரிவு செய்வதற்கு பல்வேறு துறைகள் உள்ள நிலையில் அப்பகுதி இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனால் வடகிழக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இப்பகுதியில் பட்டத்தை பூர்த்தி செய்வோர் அரச துறையினை மட்டுமே எதிர்பார்க்க வேண்டிய நிர்க்கதிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தனியார் துறையில் கூட வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு இன்று தயக்கம் காட்டுகின்றனர். அரச வேலை கிடைத்தால் தனியார் துறையினை விட்டுச் சென்று விடுவார்கள் என்பதனால் தனியார் துறைக்குள் பட்டதாரிகளை உள்ளீர்க்க தயக்கம் காட்டுகின்றனர்.

இவ்வாறான நிலையில் வடகிழக்கில் உள்ள பட்டதாரிகள் அரச தொழிலையே நம்பியிருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு மாகாணசபைகளில் பல்வேறு வெற்றிடங்கள் உள்ள போதிலும் அவற்றிற்குள் பட்டதாரிகளை உள்ளீர்ப்பதற்கான முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் பட்டதாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தமிழ் மக்களுக்கான தனித்துவக் கட்சியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே எமது போராட்டத்திற்கான வெற்றியைப் பெற்றுத் தரவேண்டும்.

அதற்கான அழுத்தங்களை எதிர்க்கட்சி என்ற ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும்.

அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பதனால் மட்டும் எதுவும் நிறைவேற்றப்பட போவதில்லை. அதற்கான அழுத்தங்களை எதிர்க்கட்சி தலைவர் வழங்க வேண்டும்.

எதிர்வரும் 29ஆம் திகதி மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மத்திய குழு கூட்டம் நடைபெறுவதாக அறிகின்றோம்.

எமக்கான தீர்வினை வழங்கி விட்டு மட்டக்களப்பில் மத்திய குழு கூட்டத்தினை நடாத்துவதே அவர்களுக்கான கௌரவமாக நாங்கள் கருதுகின்றோம்.

அதனை அவர்கள் செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம் எனவும் பட்டதாரிகள் தெரிவித்தனர்.

Comments