மட்டக்களப்பில் குடியிருப்பு நிலங்கள் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது: வியாளேந்திரன்

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்திலே பொது மக்களின் வாழ்வாதார மற்றும் குடியிருப்பு நிலங்கள் 20 இடங்கள் படையினர் மற்றும் பொலிசாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

யுத்தத்திற்குப் பின்னர் மட்டக்களப்பில் மக்களின் வாழ்வாதார மற்றும் குடியிருப்பு நிலங்கள் தொடர்பான விவரங்கள் குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, புணானை, புச்சாங்கேணி, தியாவட்டவான், கிரான், முறக்கொட்டான்சேனை, கொம்மாதுறை, மயிலம்பாவெளி, குருக்கள்மடம், ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி, ஆயித்தியமலை, வவுணதீவு, கொக்கட்டிச்சோலை, பாலமுனை, பாலமீன்மடு, வெல்லாவெளி, பாலையடிவட்டை, தும்பங்கேணி, பெரியபோரதீவு ஆகிய இடங்களிலுள்ள தனியார் வாழ்விட மற்றும் வாழ்வாதாரக் காணிகள் இன்னும் படையினராலும் பொலிசாராலும் விடுவிக்கப்படவில்லை.

முறக்கொட்டான்சேனை பாடசாலைக் காணியையும் படையினரே கைப்பற்றி வைத்துள்ளனர். இன்னமும் அதனை மாணவர்களின் பாவனைக்குக் கையளிக்க படையினர் முன்வரவில்லை.

இது பற்றி பல தடவை பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் பேசினோம். ஆனால் தீர்வு கிட்டவில்லை.

இங்கு மட்டுமல்ல வடக்கு கிழக்கிலே தமது குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரக் காணிகளைக் கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருவது தொடர் கதையாகி விட்டது.

இதனை நல்லாட்சி அரசு செவிமடுக்க வேண்டும். நல்லாட்சியைக் கொண்டு வருவதில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களும் மற்றும் இனவாதத்தையும், மதவாதத்தையும் விரும்பாத நல்லமனம் கொண்ட சிங்கள மக்களும் பாடுபட்டார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments