குப்பை பிரச்சினைக்கு பிரதான கட்சிகளின் அரசாங்கங்களிடம் தீர்வு இல்லை: ஜே.வி.பி

Report Print Steephen Steephen in சமூகம்

மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் குப்பைகளை கொட்டிய அரசாங்கங்கள் தற்போது மக்களை பொறுப்பாளிகளாக மாற்ற தயாராகி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

குப்பைகள், கழிவுகள் என்பது நாடு ஒன்றின் தேசிய பிரச்சினை. எனினும் எமது நாட்டின் அரசாங்கங்கள் இந்த தேசிய பிரச்சினையை தேசிய பிரச்சினையாக அணுகவில்லை.

கடந்த 69 ஆண்டுகளாக எந்த அரசாங்கமும் இந்த பிரச்சினைக்கு தேசிய மட்டத்தில் தலையீடுகளை மேற்கொள்ளவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கங்கள் நாட்டின் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை. குப்பைகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்த வேலைத்திட்டங்களை வகுக்கவில்லை.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் தற்காலிக தீர்வுகளே வழங்கப்பட்டன. ஓரிடத்தில் உள்ள குப்பைகள் வேறிடத்திற்கு கொண்டு சென்று கொட்டப்பட்டன.

2008 ஆம் ஆண்டு கொலன்னாவ மீதொட்டமுல்லையில் கொழும்பு நகரின் குப்பைகள் கொட்டப்படுவது ஆரம்பிக்கப்பட்டது. 1979 ஆம் ஆண்டு முதல் கொலன்னாவ நகர சபையின் குப்பைகள் மாத்திரமே அங்கு கொட்டப்பட்டு வந்தன.

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகள் புளுமெண்டல் பிரதேசத்தில் கொட்டப்பட்டு வந்ததுடன் சட்டப் பிரச்சினை ஏற்பட்டதால், மீதொட்டமுல்லை பிரதேசத்தை தெரிவு செய்தனர்.

அப்போது அந்த பிரதேசம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசம் என்பதால், குப்பைகளை கொட்ட வேண்டாம் எனக் கோரி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.

இதற்காக விசேட யோசனை ஒன்று கொலன்னாவ நகர சபையில் கொண்டு வரப்பட்ட போது மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரான தம்மிக்க விஜயமுனி மாத்திரமே எதிர்த்தார்.

ஏனைய இரண்டு கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவாக கைகளை உயர்த்தினர். மக்கள் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோத்தபாய ராஜபக்ச இராணுவம் மற்றும் பொலிஸாரை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தி குப்பைகளை கொட்டினார்.

பல வருடங்களுக்கு பின்னர் அங்கு குப்பை மலையாக உருவெடுத்தது. இறுதியில் அந்த குப்பை மலை சரிந்து பாரிய அனர்த்தம் ஏற்பட்டது.

அரசாங்கம் இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். கொலன்னாவ நகர சபை, மேல் மாகாண சபை, அரசாங்கம் என்பன இந்த பிரச்சினையை கவனத்தில் எடுக்கவில்லை.

நாட்டில் இருக்கும் குப்பை மாஃபியாவே பிரதான பிரச்சினையாக இருக்கின்றது. இந்த குப்பையை பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இருக்கின்றனர். இவர்கள் குப்பைகளை புதையலாக பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்கின்றனர்.

இதன் காரணமாக குப்பை பிரச்சினையாக மாறிய போதிலும் அது மலையாக மாறும் வரை அங்கு குப்பைகளை கொட்டினர்.

சேரும் குப்பைகளை மக்கள் வசிக்காத பகுதிக்கு எடுத்துச் சென்று மீள்சுழற்சி செய்ய முடியும். எனினும் குப்பையை பயன்படுத்தி சம்பாதிக்கும் அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமல் போனது எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Comments