குப்பை அகற்றம் அத்தியாவசிய சேவையாக்கப்பட்டது! எதிர்ப்பது தண்டனைக்குரிய குற்றம்

Report Print Aasim in சமூகம்

குப்பை அகற்றுவதை நேற்றிரவு முதல் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தியுள்ளார்.

நேற்று நள்ளிரவு 12 மணி தொடக்கம் இந்த வர்த்தமானி அறிவித்தல் அமுலுக்கு வந்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 17வது சரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் குப்பை அள்ளும் செயற்பாடுகளும் அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குப்பை அள்ளுதல், எடுத்துச் செல்லல், தற்காலிகமாக களஞ்சியப்படுத்தல் ஆகியவற்றை தடுப்பது தண்டனைக்குரிய குற்றங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இச்செயற்பாடுகளை தாமதப்படுத்தல் மற்றும் இடையூறு செய்தலும் பாரிய குற்றங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.

மேலும் குப்பை அள்ளுதல் அவற்றைக் கொட்டுதலுக்கு எதிராக பொதுமக்களை தூண்டிவிடல், எதிர்ப்பை வெளியிடல், பொதுமக்களை தூண்டிவிட்டு இடையூறுகளை ஏற்படுத்தல், வாய்மூலமாகவோ எழுத்து வடிவிலோ எதிர்க்கருத்துக்களை வெளியிடல் என்பனவும் இனிவரும் காலங்களில் தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படும்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை நீதிமன்ற உத்தரவின்றி கைது செய்யவும், சட்டத்தின் ஊடாக கடும் தண்டனை பெற்றுகொடுக்கவும் ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பொலிசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Comments