சித்திரை புத்தாண்டு நிகழ்வின் அழைப்பிதழில் தமிழ் கொலை

Report Print Reeron Reeron in சமூகம்

பிறந்திருக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டில் கிழக்கு மாகாணத்தில் மக்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் முகமாக புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

குறித்த நிகழ்வுகள் 233 இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் நாளை (22) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற இருக்கும் குறித்த நிகழ்வில் பொது மக்கள் அழைப்புக்காக விடுக்கப்பட்ட அழைப்பிதழில் தமிழ் எழுத்துக்கள் பிழையாக உள்ளதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், சித்தாண்டி தொடக்கம் பல இடங்களில் நேற்று(20) ஒட்டப்பட்ட 'சிங்கள, இந்து சித்திரை புத்தாண்டுக் கொண்டாட்டம் 2017 சித்தாண்டி' என்ற பொது மக்களுக்காக அழைப்பு விடுத்து ஒட்டப்பட்ட அழைப்பு அறிவித்தலில் பாரிய தமிழ் சொற்கள் மற்றும் எழுத்துப் பிழைகள் அதிகம் காணப்படுவதாக தெரியவருகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில் மொழிப் பிரச்சினை பாரியளவில் தற்போது வரைக்கும் பாராமுகமாகவே இருந்து வருவதினால் இவ்வாறன நிலைமைகள் தொடர்ந்து கொண்டே செல்லும்.

இவ்வாறான பொது நிகழ்வுகளை மேற்கொள்கின்ற போது மொழி, கலை கலாச்சாரம், சமயம் சார்ந்த விடயங்களை ஏற்பாட்டாளர்கள் மிகவும் முக்கிய கருத்தில் கொண்டு பல்லினம் கொண்ட எமது இலங்கை சமூகத்தினருக்கு எவ்வித பங்கமும் ஏற்படாதவாறு நடந்துகொள்வது மிகவும் பொறுப்பு வாய்ந்ததொரு நிகழ்வாகும் என பலரும் குறிப்பிடுகின்றனர்.

நாட்டின் கரும மொழியாக தமிழ், சிங்களம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது முப்படைகளுக்குமான மொழி தொடர்பான கற்கைகள் பயிற்சிகள் நடைபெற்றுவருகின்ற நிலையில் இவ்வாறான பொது அறிவித்தல் அழைப்பிதழ்களை தயார் செய்கின்ற போது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமை என புத்திஜீவிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், கிழக்கு வாழ் பொது மக்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையிலான நல்லுறவை ஏற்படுத்தும் முகமாக நடாத்தப்படும் இந்த நிகழ்வுக்கு அனைத்துப் பொது மக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கும் 233 இராணுவ தலைமையத்தினால் அழைப்பிதழ் விடுக்கப்பட்டுள்ளது.

Comments