பிரமிக்க வைக்கும் விடுதலைப் புலிகளின் இயற்கை வளங்கள்! அழிக்கும் தீவிர முயற்சியில் இராணுவம்

Report Print Vethu Vethu in சமூகம்
பிரமிக்க வைக்கும் விடுதலைப் புலிகளின் இயற்கை வளங்கள்! அழிக்கும் தீவிர முயற்சியில் இராணுவம்

கடந்த மூன்று தசாப்தங்களாக விடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்டு வந்த காடுகளை அழிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இயற்கையை பாதுகாக்கும் வகையில் விடுதலைப் புலிகளால் வளர்க்கப்பட்ட தேக்கு மர காட்டினை அழிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வடபகுதி எங்கும் விடுதலைப் புலிகளினால் முன்னெடுக்கப்பட்ட இயற்கை வளத்திட்டங்கள் தற்போது பெரும் வரப்பிரசாதகமாக மாறியுள்ளது. அதனை முற்றாக அழிக்கும் முயற்சியில் இராணுவம் ஈடுபட்டுள்ளது.

இதற்காக அந்தப் பகுதியிலுள்ள மக்களின் உதவியை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசேடமாக 1990ம் ஆண்டுக் காலப்பகுதியில் விடுதலை புலிகளினால் தாண்டிக்குளம் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் வளர்க்கப்பட்ட தேக்கு மர காடு தற்போது அரைவாசியாக அழிக்கப்பட்டுள்ளது.

மாங்குளம்-ஒட்டுசுட்டான் வீதியின், கேப்பாப்புலவு பிரதேசத்தில் அமைந்துள்ள தேக்கு மர காட்டிற்கும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட போர் முடிவடைந்த நந்திக்கடலின் மறுபக்கத்திலுள்ள தேக்கு காடு கிட்டத்தட்ட நூறு ஏக்கர் வரையிலான பெரியதென தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அனைத்து பகுதிகளும் இன்று வரையில் இராணுவமயமாக்கப்பட்டுள்ள நிலையில் பல இராணுவ முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக முந்திரி மற்றும் மாம்பழ தோட்டங்களும் விடுதலை புலிகளினால் மிகவும் சிறப்பாக பாதுகாக்கப்பட்டது. ஏ 32 வீதியில் பயணிக்கும் போது 15 ஆண்டுகள் பழமையான முந்திரி மரங்களை காண முடியும்.

விடுதலை புலிகளின் நிர்வாக பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட காடு வளர்ப்பு நடவடிக்கை, அந்த அமைப்பின் வனவள பாதுகாப்பு பிரிவினால் மேற்கொள்ளப்பட்டது.

முந்திரி மற்றும் மாம்பழ தோட்டங்கள் அவர்களினால் மிகவும் அமைப்பு ரீதியில் உருவாக்கப்பட்டது. இந்த தோட்டங்களில் வளர்க்கப்படும் பழங்களை விடுதலை புலி உறுப்பினர்களுக்கு வழங்குவதே அவர்களின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக காணப்பட்டுள்ளது.

இந்த காடுகளில் மரம் வெட்டு நடவடிக்கைகள் விடுதலை புலிகளினால் முழுமையாக தடை செய்யப்பட்டதுடன், 24 மணித்தியால பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. யாராவது மரம் வெட்டி அவர்களிடம் சிக்கிய சந்தர்ப்பத்தில் விடுதலை புலிகளினால் தண்டிக்கப்பட்டார்கள்.

கடந்த வருடம் முல்லைத்தீவில் அமைந்துள்ள பாரிய காடுகளின் மரங்கள் தெற்கு அரசியல்வாதியினால் வெட்டி விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது.

எனினும் வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவத்தினர் இந்த காடுகளை அழித்து அதனை தனிப்பட்ட வருமானமாக மாற்றிக் கொள்வதாக தெரியவந்துள்ளது.

இந்த தேக்கு மரங்களை வெட்டி பெரிய வாகனங்களில் இராணுவத்தினர் ஏற்றுவதனை காணமுடிந்துள்ளன.

சிங்கள அரசாங்கமும் இராணுவமும் காட்டை அழிக்கும் போது விடுதலை புலிகள் அதனை வளர்த்தார்கள் என யாழ் மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

Comments