முள்ளிவாய்க்காலில் மூன்றாவது நாளாக தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் பகுதியில் கடற்படையினர் வசமுள்ள 617 காணிகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம் இன்று (21) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 397 ஏக்கர் காணி மற்றும் அரச காணிகள் உட்பட 617 ஏக்கர் வரையான காணியை கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளதுடன் குறித்த கட்டுப்பாட்டு பகுதிக்குள் பொதுமக்களுக்கு சொந்தமான கால்நடைகளும் உள்ளன.

இந்த காணிகளை விடுவிக்குமாறும் கால்நடைகளை மீட்டுத்தருமாறும் அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்த போதும் காணிகளை கடற்படையினர் தமது தேவைக்கு சுவீகரிக்கும் விதத்தில் இரண்டு தடவைகள் அளவீடு செய்ய முற்பட்ட சமயம் பொதுமக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.


தற்போது கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள சுமார் 617 ஏக்கர் காணிகளும் மிகவும் வளம் நிறைந்த பகுதியாகவும் அதிக வருமானம் தரக்கூடிய கடற்தொழில் பகுதிகளையும் கொண்டுள்ளது.

இதனை விடுவித்து தருமாறு அதன் உரிமையாளர்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், இவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தரப்புக்கள் செவிசாய்க்காத நிலையில் வட்டுவாகல் முள்ளிவாய்க்கால் பகுதிகளை உள்ளடக்கி அமைந்துள்ள கோத்தபாய கடற்படைமுகாம் முன்பாக கடந்த 19ம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments