கவலை மற்றும் விரக்திக்கு மத்தியில் 60ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் போராட்டம்

Report Print Kumar in சமூகம்

வேலையற்ற பட்டதாரிகள் என்ற அடையாளத்துடன் கடும் கவலைக்கு மத்தியிலும் விரக்தியின் மத்தியிலும் தாங்கள் வாழ்ந்து வருவதாக வேலையற்ற பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்கா முன்றலில் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரக போராட்டம் 60ஆவது நாளாகவும் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று காலை காந்தி பூங்கா முன்பாக சர்வமத பிரார்த்தனையினையும் கவனயீர்ப்பு போராட்டத்தினையும் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது மதத்தலைவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனைகளை மேற்கொண்டதை தொடர்ந்து வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கழுத்தில் கயிறுகளை மாட்டி மாகாண மத்திய அரசாங்கங்கள் அதனை இழுப்பது போன்று மட்டக்களப்பு நகரில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது நியாயமான கோரிக்கையினை வென்றெடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பட்டதாரிகள் இதன்போது முன்வைத்தனர்.

இதன்போது பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கையில்,

தொழிலுரிமைக்காக நாம் மேற்கொண்டு வரும் போராட்டம் தொடர்பில் அரசியல்வாதிகள் தொடர்ந்தும் பாராமுகமாகவே இருந்து வருகின்றனர்.

பட்டதாரிகளில் பலர் குடும்பத்திற்கு தலைமை தாங்கும் நிலையில் உள்ளதுடன், பலர் தமது பிள்ளைகளையும் கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

எங்களது எதிர்காலத்தின் நிலை என்னவென்று தெரியாத நிலையிலேயே வீதிகளில் இறங்கி நாங்கள் போராடி வருகின்றோம். இதனை அரசியல்வாதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் வீதியில் இறங்கி போராடி வரும் நிலையில் வெளிச்சமூகத்தின் மத்தியில் எங்களுக்கு அவமானமே மிஞ்சியுள்ளது.

இதனை எங்கள் வாழ்க்கையினை வாழ்வதற்கான போராட்டமாக சமூகம் பார்க்க வேண்டும் எனவும் பட்டதாரிகள் தெரிவித்தனர்.

மேலும், எங்கள் வாழ்க்கையில் தற்போதுள்ள நிலைமை கஷ்டங்களையும், விரக்தியையுமே எங்களுக்கு தந்துள்ளது. எனவே நாங்கள் இந்த நிலைமையில் இருந்து மீளவேண்டுமானால் அரசாங்கம் நிரந்தர தீர்வினை எமது போராட்டத்திற்கு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கையினை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையினை உரிய தரப்பினர் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என மதத்தலைவர்கள் இதன்போது வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments