குப்பை முகாமைத்துவம் பற்றி கவனம் செலுத்தப்படவில்லை: சிவசக்தி ஆனந்தன் எம்.பி

Report Print Thileepan Thileepan in சமூகம்

அழிவுகளை ஏற்படுத்துவதற்காக பாதுகாப்பு செலவீனமாக அதிக நிதி ஒதுக்கப்படுகின்ற போதும் குப்பை முகாமைத்துவம் பற்றி கவனிக்கப்படாமையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று(20) இடம்பெற்ற மீதொட்டமுல்ல குப்பைமேட்டு சரிவில் உயிரிழந்த மக்களுக்கான அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவானது ஒரு பேரிழப்பாக பதிவாகியிருக்கிறது. 31 பேருக்கு மேல் இறந்துள்ளார்கள். பலர் காணாமல் போயுள்ளார்கள். 10 பேர் சென்ற வாகனம் கூட பாதிக்கப்பட்டிருக்கிறது.

இப்படியாக 400 மீற்றர் நீளத்திற்கு 40 அடி உயரத்திற்கு இந்த குப்பைமேடு சரிந்து அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதில் மரணித்த அனைத்து உறவுகளுக்கும் ஆத்மசாந்தி கிடைக்க வேண்டிக் கொள்கின்றோம்.

கொழும்பு மாநகரத்தில் 20 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். குப்பை முகாமைத்துவத்தை சரியாக செய்யாத காரணத்தினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

அந்த மக்கள் அவ்விடத்தில் குப்பைகளை போடவேண்டாம் என்று பல தடவை போராட்டங்களைச் செய்தும் எந்தவொரு திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.

இதற்கு அப்பால் வருடம் தோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியை பாதுகாப்பு செலவுக்காக ஒதுக்கி பல அழிவுகளைச் செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், நகரத்தில் இருக்கின்ற குப்பைகள் தொடர்பான ஒரு முகாமைத்துவத் திட்டம் நீண்டகாலமாக இல்லாமல் இருந்திருக்கின்றது.

இதனால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் தலைநகரமான கொழும்பு மாநகரித்திலேயே இந்த நிலை என்றால் ஏனைய பகுதிகளின் நிலை தொடர்பில் சிந்திக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Comments