யாழில் பிளாஸ்ரிக் பாவனைக்கு தடை

Report Print Vino in சமூகம்
advertisement

யாழ் குடாநாட்டு மக்களுக்கு நாளை சனிக்கிழமை முதல் அமுலாகும் வகையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனைக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை பூமி தினம் ஆகையால், அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் உட்பட அனைத்து இடங்களிலும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களின் பாவனையை முற்றாகத் தடை செய்யவேண்டும் என யாழ்ப்பாண மாநகர சபை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

வடக்கில் சூழல் மாசடைவதினை தடுக்கும் நோக்கில் வடக்கு மாகாண சபை எடுத்துக் கொண்ட தீர்மானத்துக்கு அனைத்து மக்களும் ஆதரவு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாண மாநகர சபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாளாந்த பாவனையின் பின்னர் கழிவாக வீசப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் ஆகியவையே பெருமளவில் திரண்டு மாநகர கழிவகற்றலில் சவால்களையும் சூழலுக்குப் பெரும் தீங்கையும் ஏற்படுத்துகின்றது.

குடிதண்ணீர் விற்பனையாகும் பிளாஸ்ரிக் போத்தல்கள், ஒருநாள் பாவனை பிளாஸ்ரிக் குவளைகள், மதிய உணவு பொதியிடும் பொலித்தீன்கள், பொருடகள் வாங்கும் இலகு பொலித்தீன் பைகள் போன்றவை இதில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

உணவுச்சாலைகள் மற்றும் திருமண மண்டபங்கள் தங்கள் வியாபார நடவடிக்கையின்போது சாப்பாட்டுத் தட்டுகளைக் கொதிநீரில் கழுவி, சுத்தமான தட்டுகளில் வாழை இலைகளை இட்டுச் சுத்தமான கண்ணாடி அல்லது சில்வர் குவளைகளைப் பாவித்துக் குடிதண்ணீரை வழங்கலாம்.

உணவுப் பொதியிடுகையில் வாழை இலைகளைப் பாவித்து குளிர்களியையும் பழங்களின் கலவையையும் சுத்தமான சில்வர் ஏந்திகளில் வழங்கி இந்த முயற்சிக்கு வலுச் சேர்க்க முடியும்.

மேலும், பூமி தினத்தில் தடை செய்யப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகள் தங்கள் இடங்களில் சேரும் திண்மக் கழிவுகளில் காணப்படுமாயின் யாழ்ப்பாண மாநகர பொதுச் சுகாதார பொறியியற் பிரிவினரால் குறித்த இடத்துக்கான கழிவகற்றல் சேவை நிறுத்தப்படும்.

இவற்றை எரிப்பதால் உண்டாகும் விளைவுகள் மனிதருக்குத் தீங்கை ஏற்படுத்தும் எனவும், மாநகர எல்லையினுள் குப்பைகளுக்கு எரியூட்டுதல் தவிர்க்கப்படல் வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement

Comments