காடையர்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்ட குடியிருப்புக்களை மறுசீரமைக்க முதலமைச்சர் நிதியுதவி!

Report Print Rusath in சமூகம்

திருகோணமலை - தோப்பூர் செல்வநகர், நீனாக்கேணிக் கிராமத்தில் முஸ்லிம் குடியிருப்புக்களுக்கும் வேலிகள், கூரைகள், மதில்கள் போன்றவற்றிற்கும் மற்றும் உடமைகளுக்கும் புத்த பிக்குகள் ஒரு சிலராலும் புத்த தீவிரவாத கும்பலாலும் ஏற்படுத்தப்பட்ட சேதங்களைப் புனரமைக்க கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நிதி உதவி வழங்கியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் எஸ்.எல். முனாஸ் வெளியிட்டுள்ள கருத்தின்படி,

பாதிக்கப்பட்ட நீனாக்கேணிப் பிரதேசத்திற்கு வியாழக்கிழமை நேரடியாகச் சென்ற முதலமைச்சரிடம் அங்கு தாங்கள் கடந்த ஓரிரு தினங்களாக எதிர்கொண்ட பயங்கரமான அச்சுறுத்தலை மக்கள் விவரித்தனர். சிலர் கண்ணீர் விட்டழுதனர்.

யுத்தம் இடம்பெற்ற வேளையில் இருந்த இனப்படுகொலைகளை மீண்டும் நினைவுபடுத்தும் அளவுக்கு துப்பாக்கி வேட்டுகளின் ஓசைகளுக்கு மத்தியில் தீவிரவாதிகள் கிராமத்திற்குள் நுளைந்து அட்டகாசம் புரிந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

எனினும், தற்போது அரசியல் தலைமைகள், சமூக முக்கியஸ்தர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பள்ளிவாசல் சம்மேளனத்தினர் ஆகியோரின் கவனக் குவிப்பினால் விடயம் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் விளைவாக அப்பகுதியில் நிலவிய அச்சுறுத்தலும் பதற்றமும் தணிந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் இடம்பெயர்ந்த நீனாக்கேணி மக்கள் தமது பழைய இடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தொடர்ந்து வரும் புனித றமழான் நோன்பு காலத்திலும் பிரதேச மக்கள் தொழுகை மற்றும் இதர வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்குத் தோதாக பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மக்களிடம் உறுதியளித்தார்.

இதனை அடிப்படையாக வைத்து சேதமாக்கப்பட்ட குடியிருப்புக்கள், வேலிகள், கூரைகள், மதில்கள் போன்றவற்றை உடனடியாகத் திருத்தம் செய்யுமாறும் முதலைமச்சர் மக்களைக் கேட்டுக் கொண்டார்.

செவ்வாய்க்கிழமை இரவு அக்கிராமத்தினுள் நுழைந்த சுமார் 200 கலகக் காரர்கள் முஸ்லிம் மக்களின் குடியிருப்பு வேலிகளைச் சேதப்படுத்தியதுடன், வீடுகளையும் பகுதியளவில் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் காரணமாக அச்சமடைந்த மக்கள், தங்களின் வீடுகளிலிருந்து அன்றையதினம் இரவு வெளியேறி, பள்ளிவாசல் மற்றும் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்திருந்தனர்.

Comments