வெள்ளவத்தை பகுதியில் வாழும் மக்களுக்கு ஆபத்து! பொலிஸார் எச்சரிக்கை

Report Print Vethu Vethu in சமூகம்

வெள்ளவத்தையில் நேற்று இடிந்து வீழ்ந்த கட்டடத்தினால் பல்வேறு சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த கட்டடத்தின் உரிமையாளர் மற்றும் இரு நிர்மாண ஒப்பந்தக்காரர்களிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த வாரம் அங்கு நடைபெறவிருந்த திருமண வைபவம் ஒன்றுக்காக கட்டடம் புனரமைக்கப்பட்டுள்ளதாக சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டடத்தின் உரிமையாளர் மற்றும் நிர்மாண ஒப்பந்தகாரர்களிடம் விசாரணை மேற்கொள்வதாகவும் இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டடத்தின் உரிமையாளர் தற்போது வெளிநாடு ஒன்றில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்திருந்த நேரத்தில் மேலும் இரண்டு புதிய மாடிகளை சேர்க்கும் நடவடிக்கைகள் இங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த கட்டடத்தில் அதிக எடை சேர்க்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனால் அந்தப் பகுதி தாழ் இறங்கக்கூடிய நிலை காணப்படுவதால், அருகில் உள்ள மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கட்டடத்தின் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்ட நபர் ஒருவர், தனது சக பணியாளர்களிடம் தன்னை காப்பாற்றுமாறு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அவரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற அனர்த்தம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் வரையில் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments