உதய கம்மன்பிலவின் மனுவை தள்ளுபடி செய்யவும்: உயர் நீதிமன்றத்தை கோரிய சட்டமா அதிபர்

Report Print Steephen Steephen in சமூகம்

நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற சமர்ப்பிக்கப்பட்டுள்ள வாக்காளர்களை பதிவு செய்யும் விசேட ஏற்பாடுகள் சட்டமூல வரைவை சவாலுக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு எடுக்காது தள்ளுபடி செய்ய வேண்டும் என சட்டமா அதிபர் இன்று உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட சட்டமூல வரைவு சமர்பிக்கப்பட்ட பின்னர், அதனை சவாலுக்கு உட்படுத்தும் மனுவை தாக்கல் செய்ய வேண்டிய கால எல்லைக்குள் மனுவின் பிரதியை உதய கம்மன்பில சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவில்லை என்பதால், அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக் டி சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, மகரகம நகர சபையின் முன்னாள் உறுப்பினர் நிஷாந்த விமலச்சந்திர ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வாக்காளர்களை பதிவு செய்யும் விசேட ஏற்பாடுகள் சட்டமூல வரைவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா என்பதை ஆராயுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தனது வாதங்களை முன்வைத்திருந்தார்.

இந்த விசேட மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, அனில் குணரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

Comments