தபால் திணைக்கள ஊழியர்களின் போராட்டத்தால் தபால் சேவை ஸ்தம்பிதம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் திணைக்கள ஊழியர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் போராட்டம் காரணமாக தபால் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல சேவைகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதுடன் குறித்த போராட்டம் இன்றும், நாளையும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்திலும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மலையக பகுதிக்கு வந்த தபால் கடிதங்கள் மற்றும் பொதிகள் போன்றன தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் நாடு முழுவதிலுமுள்ள பிரதான தபால் காரியாலயம், உப தபால் காரியாலயம், மலையக தபால் காரியாலயம் உட்பட சுமார் 5000 ஆயிரம் தபால் காரியாலயங்கள் இந்த போராட்டத்தினால் மூடப்பட்டுள்ளன.

இதனால், நாட்டில் தபால் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தபால்துறை ஊழியர்களின் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால்துறை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தால் வவுனியாவிலும் தபால்துறை முடங்கி காணப்படுகின்றது.

நிர்வாக ரீதியாக தாம் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு இதுவரையில் உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தபால் அலுவலகத்திற்காக கட்டப்பட்ட கட்டடத்தில் சுற்றுலா விடுதியை நடத்த தீர்மானித்தமைக்கு எதிராகவும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இன்று அதிகாலை 12 மணியில் இருந்து 48 மணிநேர பணிபகிஸ்கரிப்பை ஆரம்பித்துள்ளதுடன், இதற்கான தீர்வு வழங்கப்படாத போதும் எதிர்வரும் 26ஆம் திகதியில் இருந்து தொடர் போராட்டமாக நடத்த தீர்மானித்துள்ளனர்.

இதன் காரணமாக வவுனியா பிரதான தபால் நிலையம் உட்பட அனைத்து தபால் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

ஊழியர்கள் பணியில் இன்மையால் பல்வேறு தேவைகளுக்காகவும் தபால் நிலையங்களுக்கு வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த செய்தி இணைப்பு - திலீபன்

மன்னார் தபால்த்துறை ஊழியர்களின் அடையாள வேலை நிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால்த்துறை ஊழியர்கள் முன்னெடுத்து வரும் அடையாள வேலை நிறுத்த போராட்டம் இன்று மன்னாரிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நுவரெலியா, கண்டி, காலி ஆகிய தபால் நிலையங்களை சுற்றுலாத்துறைக்கு பயன்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கொழும்பு பிரதான தபால் காரியாலய கட்டடத்தில் மீண்டும் தபால் காரியாலயத்தை ஆரம்பிக்காமை, ஊழியர் சட்ட மூலத்தை திருத்தி நடமுறைப்படுத்தாமை உள்ளிட்ட நிர்வாகத்தில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மன்னார் பிரதான அஞ்சல் அலுவலகம் மற்றும் மன்னாரில் உள்ள உப அஞ்சல் அலுவலகங்கள் போன்றவற்றின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் மன்னாரில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த செய்தி இணைப்பு - ஆஸிக்

கிளிநொச்சியில் பணிபகிஸ்கரிப்பில் திணைக்கள ஊழியர்கள்

நாடளாவிய ரீதியில் தபால் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தினால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் குறித்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் காரணமாக தபால் சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிளிநொச்சி பிரதான தபாலகம் உள்ளிட்ட அனைத்து தபாலகங்களும் பூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த செய்தி இணைப்பு - யது