கிழக்கு மாகாணசபையின் செயற்திறன் இல்லாத செயற்பாடுகளே போராட்டம் முடிவின்றி தொடர்வதற்கான காரணம்

Report Print Kumar in சமூகம்

கிழக்கு மாகாணசபையின் செயற்திறன் இல்லாத செயற்பாடுகளே தங்களது போராட்டம் முடிவின்றி தொடர்வதற்கான காரணம் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 113 ஆவது நாளாகவும் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டம் எந்தவித உறுதிமொழிகளும் அளிக்கப்படாத நிலையில் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.

இந்த நிலையில் இலங்கையின் எட்டு மாகாணங்களில் 2016ஆம் ஆண்டுக்கான ஆளணிகள் உள்ளீர்க்கப்பட்டுவரும் நிலையில் கிழக்கு மாகாணசபையில் இதுவரையில் விண்ணப்பம் கூட கோரப்படாத நிலையே இருந்து வருகின்றது.

தமது நியாயமான கோரிக்கைகளுக்கு அரசாங்கங்கள் பச்சைக்கொடிகளை காட்டியுள்ளபோதிலும் உரிய தரப்பினரிடம் இருந்து உறுதியான பதில்கள் இதுவரையில் வழங்கப்படாதது கவலையளிக்கின்றது.

தமக்கான நியமனம் தொடர்பில் மத்திய மாகாண அரசாங்கங்கள் உறுதியான நடவடிக்கையினை எடுத்திருந்தால் இதுவரையில் அது தொடர்பான உறுதிமொழிகளை வழங்குவதற்கு தயங்குவது ஏன்?.

இந்த நாட்டில் ஒரு சமூகம் தொடர்ச்சியாக வீதியில் இறங்கி போராடிவருவதை வேடிக்கைபார்க்கும் நிலையினை விடுத்து அவர்களுக்கு தீர்வினை வழங்க நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.