யாழில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு உறுதியளித்த ஜனாதிபதி

Report Print Thamilin Tholan in சமூகம்

வடக்கு, கிழக்கு பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத் தொடர்பாக ஜுலை மாதம் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை நாம் வெளியிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேலையற்ற பட்டதாரிகளிடம் உறுதியளித்துள்ளார்.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான அரசாங்க வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டுமெனக் கோரி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 107ஆவது நாளாகவும் தீர்வின்றி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு யாழ். குடாநாட்டிற்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகள் நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பின் போது வடமாகாணத்திலுள்ள 3500 வேலையற்ற பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படாமையால் எதிர்நோக்கும் பாதிப்புக்கள் தொடர்பில் பட்டதாரிகளின் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டன.

இந்தச் சந்திப்பின் போது வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

மகஜரைப் பெற்றுக் கொண்ட ஜனாதிபதி வடக்கு, கிழக்கிலுள்ள பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத் தொடர்பாக யூலை மாதம் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை நாம் வெளியிடுவதற்குத் தீர்மானித்துள்ளோம்.

அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது எனவும் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொண்ட பட்டதாரி பிரதிநியொருவர் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகச் சுட்டிக்காட்டி மகஜரொன்றை கையளித்துள்ளோம்.

அந்த மகஜரில், கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி முதல் இன்று வரை உடல், உள ரீதியான பாதிப்புக்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுவரை எந்தவித தீர்வுகளும் முன்வைக்கப்படாமை வருத்தமளிக்கிறது.

ஆகவே, எங்கள் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு எங்களுக்குச் சரியான தீர்வினை வழங்க வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகஜரைப் பெற்றுக் கொண்ட ஜனாதிபதி வடக்கு, கிழக்கிலுள்ள 2000 வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனம் தொடர்பாக அடுத்த மாதம் விசேட வர்த்தமானியொன்றை வெளியிடவுள்ளோம் என்றார்.

ஜனாதிபதியின் கருத்து எங்களுக்குச் சாதகமானதாக அமைந்துள்ள போதிலும் எங்களது போராட்டத்தைத் தொடர்வதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம்.

இந்த நிலையில் முதற்கட்டமாக வடமாகாணத்திலுள்ள ஆயிரம் பட்டதாரிகளுக்கான அரசாங்க நியமனம் தொடர்பாக அரசாங்கம் பச்சைக் கொடி காட்டினால் நாங்கள் எமது போராட்டத்தைக் கைவிடுவது தொடர்பில் பரிசீலிப்போம் என தெரிவித்தார்.