வட மாகாண அமைச்சர்களின் ஊழலுக்கு எதிராக முறைப்பாடு செய்ய பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்: முரளி வள்ளிபுரநாதன்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வடமாகாண அமைச்சர்களின் ஊழலுக்கு எதிராக முறைப்பாடு செய்ய பொதுமக்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர் முரளி வள்ளிபுரநாதன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் ஆகியோருக்கு அவர் அனுப்பி வைத்த கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீதியரசர்களைக் கொண்ட குழுவானது இரண்டு வட மாகாண அமைச்சர்களின் நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை உறுதி செய்து இருவரையும் பதவியில் இருந்து அகற்றுமாறு சிபாரிசு வழங்கியுள்ள நிலையில், அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படாதது குறித்து பாதிக்கப்பட்ட மக்களும் நல்லாட்சி முறையில் நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் அதிருப்தியில் இருப்பதை உங்கள் மேலான கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

ஏற்கனவே பதவிக் காலம் முடிவடையும் நிலையில் உள்ள வட மாகாண அமைச்சரவையில் இறுதிக் கட்டத்தில் ஒரு விசாரணை குழு அமைத்தும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்காமல் வைத்து இருப்பது விசாரணை ஒரு கண் துடைப்பாக இருக்குமோ என்ற சந்தேகத்தை மக்கள் மனதில் எழுப்பியுள்ளது.

எனவே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள அமைச்சர்களை உடனடியாக பதவியில் இருந்து நீக்கி மோசடி செய்யப்பட்ட நிதியை மீண்டும் மக்களிடம் வழங்கும் வகையில் மேலதிக விசாரணைக்காக நிதி மோசடி புலனாய்வுப் பிரிவிடம் விசாரணை அறிக்கையை சாட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களுடன் ஒப்படைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இத்தகைய தமிழினத்துக்கே ஈனத்தை ஏற்படுத்தியுள்ள குற்றங்கள் புலிகளின் காலத்தில் நிரூபிக்கப் பட்டிருந்தால் குற்றவாளிகளுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை அனைவரும் அறிவார்கள்.

மேலும் ஏனைய இரு அமைச்சர்களுக்கும் எதிரான சாட்சியங்கள் சமூகம் அளிக்காத காரணத்தினால் அவர்களை சுற்றவாளிகள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனெனில் முன்னர் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு மாகாண சபை உறுப்பினர்களினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளையே விசாரணை செய்தது.

உண்மையான நீதி நிலை நாட்டப்பட வேண்டுமானால் அமைச்சர்களின் மோசடிகளை பற்றி அறிந்த அனைத்து பொது மக்களுக்கும் முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

எனவே, இந்த இரு அமைச்சர்கள் மீதும் வெளிப்படையான ஒரு விசாரணைக்கு உத்தரவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.