நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் பணிப்பகிஸ்கரிப்பால் தபால் சேவை ஸ்தம்பிதம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் சேவை ஊழியர்கள் நாடு தழுவிய ரீதியில் இன்று இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் உள்ள 653 தபால் நிலையங்களும் 3,410 உபதபால் நிலையங்களும் நேற்று மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கொழும்பு பிரதான தபால் நிலையத்தில் மாத்திரம் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் தேக்கமடைந்துள்ளதுடன் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் அஞ்சல்கள் விமான நிலையத்தில் தேக்கமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் தபால் தொழிற்சங்க ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதும் இணக்கப்பாடு எதுவும் ஏற்படாத நிலையில் இவர்களின் விடுமுறை 12 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் நேற்று முன் தினம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விண்ணப்படிவங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி நாளை அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பரீட்சார்த்திகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.