இத்தாலியில் இலங்கையர்களை ஏமாற்றிய நபர்! மாரவில பொலிஸ் நிலையத்தில் அமளி

Report Print Steephen Steephen in சமூகம்

இத்தாலியின் நாபோலி நகரில் இலங்கையர்களிடம் சீட்டு பணத்தை சேகரித்து மற்றும் வட்டிக்கு கடன் பெற்று சுமார் 50 கோடி ரூபாவை மோசடி செய்துள்ளதாக கூறப்படும் ஒருவரால் சிலாபம், மாரவில பொலிஸ் நிலையத்தில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.

சில காலம் இத்தாலியில் வசித்து விட்டு தற்போது மாரவில ரோமன் பார்க்கில் வசித்து வரும் ஒருவரே இவ்வாறு பண மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இத்தாலியில் தொழில் புரியும் போது சந்தேகநபரிடம் பணம் கொடுத்ததாக கூறப்படும் 26 பேர் இன்று (14) பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில், கொடுக்கல் வாங்கல் இத்தாலியில் நடந்துள்ளதால், பணம் கொடுத்தமை மற்றும் பணத்தை பெற்றுக்கொண்டமைக்கான சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால், உயர் அதிகாரிகளின் ஆலோசனையை பெற வேண்டும் என மாரவில பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.டி.ஆர்.பிரியந்த தெரிவித்துள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படும் நபர் சட்டத்தரணி ஒருவருடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்த 26 பேரிடமும் அவர்களின் உறவினர்களிடமும் பணத்தை பெற்றதாக அவர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணி முன்னிலையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

அத்துடன் தான் பணத்தை மோசடி செய்யவில்லை எனவும் தன்னிடம் பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் திருப்பி கொடுக்காமல் இருப்பதால், இந்த நிலைமை உருவாகியுள்ளது எனவும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எந்த வகையிலாவது பணத்தை திரும்ப கொடுப்பதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

வட்டிக்கு பணத்தை பெற்றுக்கொள்வது அல்லது சீட்டு பிடிப்பது போன்ற விடயங்களில் பொலிஸார் தலையிட முடியாது எனவும் இவ்வாறான விடயங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் பொலிஸ் பரிசோதகர் கூறியுள்ளார்.