குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மீது விமர்சனம்! ஊடகவியலாளருக்கு அழைப்பாணை

Report Print Aasim in சமூகம்

குற்றப் புலனாய்வுத்திணைக்கள அதிகாரிகளை விமர்சிக்கும் வகையில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் ஒருவருக்கு கம்பஹா நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் கம்பஹா, வெலிவேரிய அருகே ரதுபஸ்வெல கிராம மக்கள் சுத்தமான குடிநீர் வசதி செய்துதருமாறு தொடர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

அதன்போது இராணுவத்தினர்மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டு, மேலும் பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இராணுவத்தினர் தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் சிங்கள வார இதழ் ஒன்று கைது செய்யப்பட்டுள்ள இராணுவத்தினரை புனிதர்களாகவும், அவர்களைக் கைது செய்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிசாரை மோசமான முறையிலும் விமர்சித்து செய்தி வெளியிட்டிருந்தது.

நேற்றையதினம் கம்பஹா நீதிமன்றத்தில் ரதுபஸ்வெல சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இதுகுறித்து பொலிசார் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த செய்தியை எழுதிய ஊடகவியலாளரை எதிர்வரும் 28ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கம்பஹா மாஜிஸ்திரேட் நீதிபதி ருவன் பதிரண அழைப்பாணை விடுத்துள்ளார்.