விசனத்திற்கு மத்தியில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் 21ஆவது பட்டமளிப்பு விழா

Report Print Reeron Reeron in சமூகம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 21ஆவது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழகத்தின் நல்லையா மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்திற்கு முன்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக பட்டமளிப்பு விழா கலையிழந்து உள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதான வாயிலை முற்றுகையிட்டு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 12ஆவது நாளாகவும் தொடர்கிறது.

தொடர் போராட்டம் காரணமாக பல்கலைக்கழகத்தின் இரு பிரதான வாயிற் கதவுகள் உட்பட பல பகுதிகளில் கறுப்புக்கொடிகள் தொங்கவிடப்பட்டு துக்க தினம் போல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மாணவர்களினால் இன்றைய பட்டமளிப்பு விழாவிற்கென இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் வருகின்ற பொதுமக்கள் மற்றும் புத்திஜீவிகள் சங்கடத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

பல்கலைகழகத்தின் 21ஆவது பட்டமளிப்பு விழா இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை மறுபுறம் மாணவர்களின் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருப்பதானது, பட்டம் பெறுவதற்கு வருகின்ற மாணவர்களுக்கும் மட்டக்களப்பு பொது மக்களுக்கும் குழப்பத்தை தோற்றுவித்துள்ளது என தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குறித்த பட்டமளிப்பு விழாவானது கடந்த மாதம் நடைபெறுவதற்காக ஏற்பாடாகியிருந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.