வடமாகாண சபையை ஒற்றுமையாக செயற்படுமாறு வலியுறுத்தி ஒட்டுசுட்டானில் போராட்டத்திற்கு அழைப்பு

Report Print Theesan in சமூகம்

வடமாகாண சபை உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டை கலைந்து ஒற்றுமையாக செயற்படுமாறு வலியுறுத்தி ஒட்டுசுட்டான் பிரதேச மக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட உள்ளது.

குறித்த போராட்டம் எதிர்வரும் புதன்கிழமை(21) மாலை மூன்று மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த பேரணி ஒட்டுசுட்டான் நீர்பாசன சந்தியில் இருந்து ஆரம்பமாகி, ஒட்டுசுட்டான் சிவன் கோயில் சந்தியில் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் மகஜர்கள் அனுப்பி வைக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இதில் அனைவரும் கலந்து கொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்துமாறு போராட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான செயற்பாடுகளை கண்டித்து மன்னாரில் போராட்டம்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளைக் கண்டித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாளை(20) ஜனநாயக ரீதியிலான போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மன்னார் பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் நாளை காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் தலைவர் வி.எஸ்.சிவகரன் அறிவித்துள்ளார்.

மேலும் ஜனநாயக படுகொலைக்கு எதிராக மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைவரையும் அணிதிரண்டு குறித்த போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குமாறு வி.எஸ்.சிவகரன் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்தி இணைப்பு- ஆஸிக்

வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் கையெழுத்துத் திரட்டும் போராட்டம்

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளைக் கண்டித்து கிளிநொச்சி மாவட்ட ஜனநாயக இளைஞர் அமைப்பினரால் கையெழுத்துத் திரட்டும் போராட்டம் இன்று(19) முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி பொதுச்சந்தையில் மாலை 4 மணியளவில் ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்ட குறித்த கையெழுத்துத் திரட்டும் போராட்டத்தில் பல இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக நாளை(20) இரணைமடு சந்தியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சியின் பல பாகங்களிலும் கையெழுத்துத் திரட்டும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன், கையொப்பம் தாங்கிய கடிதம் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் போராட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக செய்தி - யது