சம்பந்தர் ஐயா கூட்டமைப்பின் தலைவராக இருப்பதற்குரிய வாய்ப்பை இழந்திருக்கின்றார்! சிவசக்தி ஆனந்தன்

Report Print Thileepan Thileepan in சமூகம்

சம்பந்தர் ஐயா கூட்டமைப்பின் தலைவராக இருப்பதற்குரிய வாய்ப்பை இழந்திருக்கின்றார் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் நாயகம் பத்மநாபாவின் 27வது நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரியவருவதாவது,

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் நாயகம் பத்மநாபாவின் 27வது நினைவு தினத்தில், அவரின் மனப்பதிவுகளை சொல்ல எண்ணுகின்றேன். முக்கியமாக தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும்.

தமிழ் இயக்கங்கள் மற்றும் கட்சிகளுக்கிடையே ஒரு ஐக்கியத்தை உருவாக்க வேண்டும் உட்பட வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண அரசை உருவாக்குவதிலே அவர் மிகப்பெரிய பணியினை செய்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாண சபை உருவாக்கத்திலே கிட்டத்தட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட எமது கட்சி தோழர்கள் ஆதரவாளர்கள் உயிர் நீத்திருக்கின்றார்கள்.

வடகிழக்கு மாகாண சபை இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தாலும் கூட இன்றை தினம் வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருக்கின்ற சர்ச்சைகள் தமிழ் மக்கள் மத்தியிலேயும் குறிப்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைப்பாகத்தை வகிக்கின்ற தமிழரசு கட்சியினுடை தலைவர்கள் ஏனைய பங்காளி கட்சிகளின் ஆலோசனைகள், அபிப்பிராயங்கள் கேட்காமல் தன்னிச்சையாக எடுத்த முடிவுகளாகும்.

குறிப்பாக மாகாண சபை தொடர்பாகவும் அதன் அமைச்சர்கள் தொடர்பாகவும் எடுத்த முடிவுகளால் பாரியதொரு நெருக்கடியினை உருவாக்கியுள்ளதுடன், விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது.

வடகிழக்கு இணைந்த மாகாண சபையானது தமிழ் மக்களிற்குரிய தற்காலிகமான தீர்வாக தோழர் பத்மநாபா ஏற்றுக்கொண்டார்.

இதற்கு காரணம் அன்று ஏற்பட்ட சர்வதேச மாற்றங்களினால் தமிழ் மக்களுக்கு ஏற்பட இருந்த பாரிய அழிவுகளையும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வை அளிக்க வேண்டும் என்பதற்காக தற்காலிகமாக பத்மநாபாவின் தலைமையிலே வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை உருவாக்கப்பட்டது.

பல முயற்சியாளர்களிற்கு நடுவே உருவாக்கப்பட்ட இந்த மாகாண சபையை முன்னெடுத்து செல்வதில் தமிழரசு கட்சியின் தலைமை விட்ட பாரிய தவறானது மாகாண சபை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தொடர்பாகவும் பாரிய கேள்விக்குறியை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற மூன்று பங்காளி கட்சிகளின் கருத்தை கூட தலைவர் சம்பந்தன் நிராகரித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய தலைமை பொறுப்பை கூட இந்த மாகாண சபையிலே ஏற்பட்டிருக்கின்ற சர்ச்சையைக் கூட சரியாக தீர்க்கப்படாமையினால் தலைவர் சம்பந்தர் இழந்திருக்கின்றமையை தான் நாங்கள் பார்க்கின்றோம்.

கூட்டமைப்பிற்கு என உயர்மட்ட குழு இருக்கின்றது. இக்குழுவை கூட்டி வெளிப்படையாக ஒரு முடிவெடுக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கின்ற தன்மையானது பங்காளிக்கட்சியான எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கின்றது.

எதிர்காலத்தில் சம்பந்தர் ஐயா கூட்டமைப்பின் தலைவராக இருப்பதற்குரிய வாய்ப்பை இழந்திருக்கின்றார். தமிழ் மக்களுக்கிடையில் ஒற்றுமை வேண்டும், தமிழ் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை வேண்டும் என்பதை தோழர் பத்மநாபா காட்டிய வழியில் கடந்த பதிநான்கு வருடமாக தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட்டு வந்துள்ளோம்.

எங்களிற்கு பல்வேறு பட்ட அநீதிகளை கூட்டமைப்பின் தலைவராலும் தமிழரசு கட்சியாலும் இழைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழ் மக்களிற்கு நிரந்தரமான அரசியல் தீர்வை காணுவதற்கு பத்மநாபா காட்டிய வழியில் ஒற்றுமை ஐக்கியம் தேவை என்பதன் அடிப்படையில் நாம் பயணிக்கின்றோம்.

தமிழ் மக்களுக்கு மாற்று தலைமை தேவை என்பதை தற்போதைய நிலைமை இட்டுச்செல்கின்றது. எதிர் காலத்திலே தமிழ் மக்களுக்கான புதிய தலைமை தமிழ் மக்களும் ஏனைய கட்சிகளையும் இணைத்து உருவாக்க வேண்டிய பாரிய கடமை அனைவருக்கும் இருக்கின்றது என்றார்.