சலசலப்பு இல்லாமல் மயிலத்தமடு மேய்ச்சற்தரை விடயத்தைக் கையாண்டோம்: கி. துரைராசசிங்கம்

Report Print Reeron Reeron in சமூகம்

உண்மையாக நாங்கள் செய்ய வேண்டிய சேவை என்ன என்பதை அறிந்து அதன் நிமித்தம் இந்த மேய்ச்சற் தரை விடயத்தை மிகவும் தந்திரோபாயமாகவும் சலசலப்பின்றியும் கையாண்டு வந்தோம். அதன் காரணமாக எமது கால்நடையாளர்கள் சுதந்திரமாக இங்கு இருக்கின்றார்கள். என கிழக்கு மாகாண கால்நடை அமைச்சர் கி. துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு மேய்ச்சற்தரை கால்நடை வளர்ப்பாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட கமநல உதவி ஆணையாளர் ஆகியோர் இணைந்து மயிலத்தமடு பிரதேசத்தில் கால்நடைகளுக்கான குளம் ஒன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (19) மயிலத்தமடு பிரதேசத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக அப்பிரதேசத்தில் குளம் ஒன்றினை அமைக்கும் செயற்திட்டத்திற்காக 05 மில்லியன் ரூபா தொகையில் குளக்கட்டு அமைக்கும் செயற்திட்டம் முதற்கட்டமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,

இம் மயிலத்தமடு பிரதேசம் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லையாக இருந்தது. இப் பிரதேசத்தில் விவசாயிகள் என்று சொல்லப்பட்ட அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் பல பின்புலங்களை வைத்துக் கொண்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிலே ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். 10000 ஏக்கருக்கும் மேலாக நிலங்கள் அபகரிக்கப்பட்டிருந்தது, மிகப்பெரிய அளவிலான காடுகள் இங்கு அழிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயங்கள் சொல்லப்பட்ட போதெல்லாம் இது மாவட்ட நிர்வாகத்திற்குள் வருகின்றதா அல்லது பிரதேச நிர்வாகத்திற்குள் வருகின்றதா அல்லது வனபரிபாலனத்திற்குள் வருகின்றதா, வனஜீவராசிகள் திணைக்களத்திற்குள் வருகின்றதா என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்தது.

இறுதியில் இது மகாவலி அபிவிருத்திக்குரிய பிரதேசம் என்பது கண்டுபிடிக்கப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபரின் துணையோடும் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களின் துணையோடும் நான் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினுடைய பணிப்பாளர் நாயகம் அவர்களைச் சந்தித்து இவ்விடயத்தைக் கூறினேன்.

இதன் போது அவரின் ஆவணங்களின் அடிப்படையில் இது மகாவலி அபிவிருத்தியின் வலது கரைத் திட்டத்தின் கீழ் வருகின்றது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டு மகாவலி அபிவிருத்தி அதிகார சபை இவ்விடயத்தைச் சட்ட பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டதற்கிணங்கவும், தொடர்ந்து எமது மாவட்ட அரசாங்க அதிபரினுடைய முயற்சியின் காரணமாகவும் இப்பிரதேசத்தை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தன்னுடைய நேரடி கண்காணிப்புக்குள்ளே கொண்டு வந்தது.

இங்கிருந்த அத்து மீறிய விவசாயிகளுடைய செயற்பாடு காரணமாக எமது பண்ணையாளர்கள் பல துன்பங்களை அனுபவித்தார்கள்.

அவர்களுடைய கால்நடைகள் சுருக்கு வைத்தல், பொறி வைத்தல், சுட்டுக் கொள்ளுதல் ஆகிய நடவடிக்கைகளின் காரணமாக பலவிதமான குழப்பங்களை அவர்கள் எதிர்நோக்கி வந்தார்கள். அது மட்டுமல்ல பொலிஸார், இராணுவத்தினுடைய அடாவடித்தனங்கள் கூட அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது.

ஆனால் இவை நாங்கள் எடுத்த நடவடிக்கைகளின் பின்பு தடுக்க முடிந்தது. பணிப்பாளர் நாயகத்திடம் நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பிரதேசத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மகாவலி அபிவிருத்திப் பாதுகாப்புத் துறையினர் மேற்கொண்டிருந்தார்கள்.

அவ்வாறு நடைபெற்றதன் காரணமாக இப்பிரதேசத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட விவசாய நடவடிக்கையை தடுத்து நிறுத்த முடிந்தது.

இந்த விடயம் தொடர்பாக எவ்வித இன, மத, பேதமும் காட்டப்படவில்லை. அவர்கள் சட்டபூர்வமாக இங்கு வந்திருந்தால் நாங்கள் அவர்கள் தொடர்பாக சட்டபூர்வாமான நியாயங்களைப் பெற்றுக் கொடுத்திருப்போம் ஆனால் அவர்கள் வேறு பின்புலத்தோடு இவ் ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளைச் செய்தமை காரணமாகத்தான் மேற்படி நடவடிக்கைகள் மூலம் அப்புறப் படுத்தப்பட்டிருக்கின்றார்களே தவிர அதில் இன மொழி, மத பேதங்கள் பிரயோகிக்கப்படவில்லை.

இவ்வாறான ஒரு நிலைமையை நாங்கள் மிகவும் சுமுகமாகச் செய்திருக்கின்றோம். இந்த விடயத்தை வைத்துக் கொண்டு எத்தனையோ பத்திரிகை அறிக்கைகள் வந்ததை அனைவரும் அறிவார்கள் நாங்கள் ஏற்பாடு செய்த எமது மேதினக் கூட்டத்தில் கூட ஒரு குறிப்பிட்ட அணியினர் வந்து எமது மேய்ச்சற்தரைகளை விடுவித்துத் தா எமது கால்நடைகளை காப்பாற்றித் தா என்கின்ற அடிப்படையிலான பிரசார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவ்வாறான இந்த சூழ்நிலைகளில் இவ்விடயத்தை நாங்கள் சலசலப்பில்லாமல் செய்திருக்கின்றோம்.

இவ்விடயம் தொடர்பில் நான் அமைச்சுப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் நானும் அரசாங்க அதிபரும் நேரடியாக இவ்விடம் விஜயம் மேற்கொண்டு குறிப்பிடட விவசாயிகளுடன் கலந்துரையாடினோம் அதற்கு இந்த அரச நிர்வாகத்தை மழுங்கடிக்கக் கூடிய விதத்திலே பத்திரிகை கட்டுரைகள் அறிக்கைகள் எல்லாம் வந்தது இந்தப் பிரதேசத்தை விற்றுவிடுகின்றோம் என்கின்ற அடிப்படையிலேயும் அவை வந்தது.

ஆனால் அவற்றையெல்லாம் எந்தவிதத்திலும் கோபப் படாமல் உண்மையாக நாங்கள் செய்ய வேண்டிய சேவை என்ன என்பதை அறிந்து அதன் நிமித்தம் மாவட்ட நிர்வாகமும் செயற்பட்டது. அதன் காரணமாக எமது கால்நடையாளர்கள் சுதந்திரமாக இங்கு இருக்கின்றார்கள். இந்த மேய்ச்சற் தரை விடயத்தை நாங்கள் மிகவும் தந்திரமாகக் கையாண்டு வந்தோம்.

அதனைத் தொடர்ந்து இங்கிருக்கின்ற பண்ணையாளர்களின் மிகப் பெரிய வேண்டுகோளாக ஒரு குளம் அமைத்துத் தர வேண்டும் எனக் கோரப்பட்டது. இந்தக் கோரிக்கை விடப்பட்ட போது நான் பயந்தேன். ஏனெனில் முதல் எதிர்க்கட்சியாக இருந்தபோது நிலைமை வேறு ஆனால் இப்போது தூக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கும் வந்திருக்கின்ற போது இதனை எவ்வாறு செய்து முடிப்பது என்கின்ற பயம் எனக்குள் எழுந்தது.

ஆனால் நான் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களையும் கமநல அபிவிருத்தித் திட்ட உதவி ஆணையாளர் அவர்களையும் அணுகிய போது அவர்கள் மிகவும் சாதாரணமாகச் சொன்னார்கள் அதனைச் செய்து முடிக்கலாம் என்று.

இந்த விடயத்தில் கமநல அபிவிருத்தித் திட்ட உதவி ஆணையாளரும், அரசாங்க அதிபரும் மிகவும் ஒத்துழைப்புடன் செயற்பட்டார்கள். நாங்கள் ஒரு மாதத்திற்கு முன்னர் இந்த இடத்தினை வந்து பார்வையிட்டோம். அதன் அடிப்படையில் நாங்கள் இப்போது அடிக்கல் நாட்டியிருக்கின்றோம்.

இது வன இலாகா, வன ஜீவராசிகள், மகாவலி அபிவிருத்தி என்கின்ற எல்லா விடயங்களுக்கும் அப்பால் இந்த வேலையைச் செய்து முடிக்க வேண்டும் என்பதற்கான தங்களுடைய நிர்வாகம் தொடர்பான தந்திரோபாயங்களைக் கையாண்டு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஆகியோர் முன்வந்து இந்த திட்டத்தினை அமுழ்ப்படுத்தி இருக்கின்றார்கள்.

நான் உண்மையிலேயே இவ்விடயம் கனவு என்று தான் நினைக்கின்றேன். இவ்வாறான விடயங்கள் நடக்குமா என்று தெரியாது ஏனெனில் இவ்வாறான விடயங்களில் இதுதான் என்னைப் பொருத்தமட்டிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொருத்த மட்டிலும் ஒரு முதலாவது அனுபவம் இதனை இலகுவாகச் செய்து தந்த மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஆகியோருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்நிகழ்வின்போது மாவட்ட அரசாங்க அதிபர் சாள்ஸ், கமநல அபிவிருத்தித் திணைக்கள பிரதம பொறியியலாளர் பிரபாத், மாவட்ட கமநல அபிவிருத்தி உதவிப் பணிப்பாளர் சிவலிங்கம் மற்றும் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.