பிரமாண்டமான 'கரபிராம் 2017' ஈழம் சாவடி: தமிழர்களின் வரலாற்றுத் தடம் பதிப்பு

Report Print Dias Dias in சமூகம்

ஒன்ராரியோவின் பிரம்ரன் நகரில் பல்கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பல நாடுகளையும் இனங்களையும் உள்ளடக்கிய பிரமாண்டமான கரபிராம் கொண்டாட்டம் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளது.

பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் பிரதான ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெறும் கரபிராம் பல்கலாச்சார விழாவில் ஈழம் சாவடியின் கொண்டாட்டமும், 5 வது தொடர் வருடமாக பெருமெடுப்பில் இடம்பெறவுள்ளது.

கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரமாண்டமாய் அமையும் ஈழம் சாவடிக்கு இந்த வருடம் மைய ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

பல மத்திய மாகாண நகரசபை அரசியல் தலைவர்கள் தமது வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர். கரபிராமில் 14 சாவடிகள் மொத்தம் 53 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இதில் கனடியத் தமிழர்களின் தொன்மையான வரலாற்று கலாச்சார பாரம்பரியங்களை ஏனைய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஈழம் சாவடி அமைவது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், கனடிய பல்கலாச்சார வாழ்வை பிரம்ரன் பல்கலாச்சார விழா பிரதிபலித்து நிற்பதாகவும் வாழ்த்தி மகிழும் இவர்களது பாராட்டுக்களுடன், பல ஆயிரக்கணக்கான மக்களின் வருகைக்காக களம்கட்டி நிற்கிறது கரபிராம் ஈழம் சாவடி 2017.

ஒன்ராரியோ எதிர்க்கட்சித் தலைவர் தனது வாழ்த்துச்செய்தியில், ஈழம் சாவடி நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பல்கலாச்சார சமூகத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொள்ள இவ்வாறான நிகழ்வுகள் மேலும் வலுச் சேர்ப்பதாகவும், தமிழ் கலை கலாச்சாரங்களை வளமாக்கும் இத்தகைய நிகழ்வுகள் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

கலாச்சாரங்களின் சங்கமமாக அமையும் இம்மூன்று நாள் விழாவில் அமையும் 14 கலாச்சார சாவடிகளில் ஒன்றாக ஈழம் சாவடியும் இடம்பெற்றிருப்பது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாகவும், பிரம்ரன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு மக்கள் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.

ஈழம் சாவடி யூலை 14ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும், சனி 15ம் நாள் மதியம் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரையும், ஞாயிறு 16ம் நாள் மதியம் 12 மணிமுதல் மாலை 7 மணிவரையும் மக்கள் வருகைக்காக திறந்திருக்கும் என அறியத்தரப்பட்டுள்ளது.

உணவுச்சாவடிகள், மலிவு விலை வர்த்தகச் சாவடிகள், தமிழர் பாரம்பரிய கண்காட்சி, தமிழர் கலை நிகழ்வுகள் என ஈழம் சாவடி ஒவ்வொரு நாளும் அனைத்து இன மக்களுக்கும் பெருவிருந்தாக இவ்வாண்டும் அமையவுள்ளதாக அமைப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரம்ரனில் Sandalwood parkway/Dixie Road சந்திப்புக்கு அருகாமையில் 1495 Sandalwood Parkway இல் உள்ள Brampton Soccer Centre இல் பிரமாண்ட அரங்கில் ஈழம் சாவடி அமையவுள்ளதாக அமைப்பாளர்கள் கூறியுள்ளார்.

அத்துடன், வெள்ளி மாலை முதல் ஞாயிறு வரை தமிழர் சாவடிக்கு மத்திய, மாநில மற்றும் நகரப் பிரதிநிதிகள் பலரும் வரவுள்ளதாகவும் அவர்கள் மேலும் அறியத்தந்துள்ளனர்.

வெள்ளி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவிற்கு பெருமளவில் தமிழ் மக்களை கலந்து சிறப்பிக்குமாறும் அவர்கள் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஈழத் தமிழர்களுக்கு தனிப்பெருமையைத் தேடித்தரும் 'ஈழம் சாவடி' என்ற பெயரை எப்படியாவது நிராகரித்து விட வேண்டும் என்பதில் எதிரிகள் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டபோதிலும், 5வது வருடமாக வெற்றியுடன் ஈழம் சாவடி அமையவுள்ளது.

இந்தியாவுக்கென ஒரு சாவடி அமைக்கப்படும் அதேவேளை சீக்கியர்கள் தமக்கென ஒரு தனியான சாவடி அமைப்பதை உதாரணம் காட்டி, ஈழம் சாவடியை நீக்குமாறு மீண்டும் எதிரிகள் போர்க்கொடி எழுப்பிய போதிலும், தடைகளைத் தாண்டி இவ்வருடமும் ஈழம் சாவடி களம் காண்கிறது.

ஹவாய் சாவடி, பிலிப்பைன்ஸ் சாவடி இந்திய சாவடி, லத்தீன் அமெரிக்க சாவடி போன்ற பலவற்றோடு, ஈழம் சாவடியும் பல சுவையான உணவுகளையும் பண்பாட்டு கலை நிகழ்வுகளையும் சுவைபட வழங்கத் தயாராகி வருகின்றது.

மேலும், கரபிராம் பல்கலாச்சார விழாவில் சந்திப்போம் என உரிமையுடன் தமிழ் உறவுகளுக்கு அழைப்பு விடுக்கின்றனர் என பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.