யாழ்ப்பாணப் பாரம்பரியத்தில் ஆடிப்பிறப்பின் முக்கியத்துவம் என்ன?

Report Print Thamilin Tholan in சமூகம்

யாழ்ப்பாணப் பாரம்பரியத்திலும், சைவத்தமிழ்ப் பாரம்பரியத்திலும் ஆடிப்பிறப்பு மிக முக்கியத்துவம் பெறுகிறது என சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான ஆறு. திருமுருகன் தெரிவித்துள்ளார்.

சைவப்பெரு மக்களின் ஆடிப்பிறப்புப் பண்டிகை உலகெங்கும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்று எமது செய்திச் சேவைக்கு விசேடமாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தை மாதம் முதல் ஆனி மாத நிறைவு வரை உத்தராயண காலமெனவும் ஆடி மாதம் முதல் மார்கழி மாத நிறைவு வரை தட்சாயண காலமெனவும் அழைக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று ஆடி பிறக்கின்றது. மழை பொழிந்து, எங்களுக்குடைய வளங்கள் செழுமைப்பட்டு எங்களுடைய மக்கள் அடுத்த உணவுத் தேடலுக்குத் தயார் படுத்தும் காலப்பகுதியாக ஆடி மாதம் அமைந்துள்ளது.

எந்தவொரு காரியத்தையும் தெய்வ வழிபாட்டுடன் ஆரம்பிக்கும் பாரம்பரியம் எம்மத்தியிலும் உண்டு.

ஆடி மாதம் பூதேவியாகிய பூமாதேவியைப் போற்றி வழிபாடாற்றித் தங்களுடைய நிலங்களைப் பண்படுத்த ஆரம்பிக்கும் தெய்வீகக் காலமாகத் திகழ்கிறது.

மேலும், இந்தத் திருநாளின் மகத்துவத்தை உணர்ந்து உற்றார், உறவினர்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்வதுடன், எமது மூதாதையர்களையும் இந்த நாளில் நினைந்து பிரார்த்திக்க வேண்டும் என பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான ஆறு. திருமுருகன் குறிப்பிட்டுள்ளார்.