இலங்கையில் இப்படி ஒரு இடமா? அறியப்படாத அழகிய இடத்தின் மறுபக்கம்!

Report Print Jeslin Jeslin in சமூகம்

மிக வேகமாக சுழன்று கொண்டிருக்கும் உலகின் தேவைக்கேற்ப மனிதர்களும் தங்களை இயந்திரமான வாழ்க்கைக்கு பழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர்.

தமக்கெனவொரு நேர அட்டவணையை தயாரித்து அதன்படி வாழப் பழகிக்கொண்டுள்ளனர். ஒவ்வொருவரும் தமது வாழ்நாளின் இறுதியில் தாம் கடந்து வந்த சுவாரஷ்யமான தருணங்களை எண்ணிப்பார்க்கும் போது அவை நிரப்பப்படாத ஒரு வெற்றுப் படிவமாகத்தான் காணப்படும்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இவ்வாறு வெறுமையான வாழ்க்கையைத் தவிர்த்து அனைவரும் பயனுள்ளதாகவும், அமைதியானதுமாக தமது வாழ்வை வாழ முற்பட வேண்டும்.

இவ்வாறு தமது மனதினை அமைதிப்படுத்தவும், அழகுபடுத்தவும் அனைவரும் சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டு வருவது வழமையாக அனைத்து நாடுகளிலுமே காணப்படுகின்றது.

இலங்கையில் மனதை அமைதிப்படுத்தும் வகையில் பல்வேறு சுற்றுலாத்தலங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் பல நாம் அறிந்திராதவை.

குறிப்பாக மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள செம்புவத்த ஏரி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் எழில்கொஞ்சும் இயற்கையை தன்னகத்தே கொண்டுள்ளது.

மாத்தளை, எல்கடுவ தேயிலை தோட்டத்தின் மலை உச்சியில் குறித்த ஏரி அமைந்துள்ளது.

இந்த ஏரியை பார்வையிடுவதற்கு உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மாத்திரமன்றி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் வருகைத் தருகின்ற போதிலும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் பலருக்கு இவ்வாறானதொரு ஏரி இருப்பது தெரிந்திராத விடயமே.

குறித்த ஏரிக்கு செல்லும் போது அங்குள்ள தேயிலை தொழிற்சாலைகளில் நுழைவுச் சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த ஏரி ஆழமாக இருப்பதன் காரணத்தினால் அங்கு ஒருசில இடங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு அப்பால் பல செயற்கை நீர்த் தடாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏரியைச் சுற்றி காண்போரை வசீகரிக்கும் வகையில் இயற்கை நீர்வீழ்ச்சிகளும், மலைத்தொடர்களும் அரணாக அமைந்திருப்பது குறித்த ஏரியின் சிறப்பம்சமாகும்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

ஏரியினைச் சுற்றி சுற்றுலாப்பயணிகள் ஓய்வெடுக்கவென சிறிய குடில்கள் அமைக்கப்பட்டு அமைதியான ஒரு சூழலை கொண்டு காணப்படுகின்றது.

ஏரிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதியும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் பல கடைகள் அங்கு அமையப் பெற்றிருக்கின்றன.

நீங்கள் ஒரு இயற்கை காதலனாக இருந்தால் உங்கள் பயணப் பட்டியலில் இருந்து கட்டாயமாக இந்த செம்புவத்த ஏரியை தவிர்க்க முடியாது.

advertisement