சைட்டம் பிரச்சினை இன்னும் தீரவில்லை: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Report Print Steephen Steephen in சமூகம்

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை அரசுடமையாக்கப்பட்டமை சம்பந்தமாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று ஊடகச் சந்திப்பொன்றை நடத்தியது.

இங்கு கருத்து வெளியிட்ட சங்கத்தின் உதவி செயலாளர் மருத்துவர் கவிந்த டி சொய்சா, நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அரசாங்கம் சுவீகரித்து கொண்டதால், சைட்டம் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது எனக் கூறியுள்ளார்.

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை அரசாங்கத்திற்கு சொந்தமாகியதன் மூலம் சைட்டம் பிரச்சினை முடிந்து விட்டதாக தவறான எண்ணத்தை நாட்டில் ஏற்படுத்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன முயற்சித்து வருகிறார் என சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும் சைட்டம் பிரச்சினையை தீர்க்க தெளிவாக நிலைப்பாடுகளை வெளியிட்டு வரும் நிலையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் வகையில் சுகாதார அமைச்சர் செயற்பட்டு வருகிறார் எனவும் இங்கு குற்றம் சுமத்தப்பட்டது.

எவ்வாறாயினும் இது சம்பந்தமாக எதிர்வரும் 23ம் திகதி மத்திய செயற்குழுக் கூடி தீர்மானங்களை எடுக்க உள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

இலங்கை மருத்துவச் சபை அங்கீகரிக்காத எந்த மருத்துவ மாணவர்களுக்கு அரச மருத்துவமனைகளில் செயன்முறை பயிற்சிகள் வழங்கப்பட மாட்டாது.

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை அரசுக்கு சொந்தமாகியுள்ள நிலையில், அதில் அரச மருத்துவர்கள் இருக்க வேண்டும்.

தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அங்குள்ள நோயாளிகளை விற்பனை செய்ய வாய்ப்பு இருக்கக் கூடாது எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.