சுயாதீன கட்டுக்கோப்புக்குள் வாழவே விரும்புகிறோம்!: சீ.வி.கே

Report Print Thamilin Tholan in சமூகம்

தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகளாக சகோதரர்களாக சம உரிமையோடு எங்களுடைய மொழியையும், கலாசாரத்தையும், மதங்களையும் பாதுகாத்துக் கொண்டு எங்களுடைய பாரம்பரிய நிலங்களில் நிர்வாக முறையினை ஏற்படுத்தி அதில் வாழ்வதற்கே நாங்கள் விரும்புகின்றோம். சுயாதீன கட்டுக்கோப்புக்குள்ளே வாழ விரும்புகிறோம் என வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

கடந்த-15.07.2017 அன்று கொழும்பில் இடம்பெற்ற அவைத்தலைவர்களின் எட்டாவது மாநாட்டில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வடமாகாண அவைத்தலைவர் ஆற்றிய உரையின் முழுவடிவம் வருமாறு,

எல்லோருக்கும் என்னுடைய காலை வணக்கங்கள். இந் நாட்டினுடைய மாகாணசபைகள் வரலாற்றிலே ஒரு முக்கியமான நாளாக இந்த நாளை நாங்கள் பார்க்கின்றோம்.

தமிழ் மக்களுக்கு நான் என்னுடைய உரையை தமிழில் ஆரம்பித்து தொடர்ந்து சிங்களத்திலே பேசுவேன்.

தமிழ் பேசும் மக்களுடைய இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கின்ற மாகாணசபை முறைமை ஆரம்பித்து கிட்டத்தட்ட 30 வருடங்களாகின்ற நிலையில் அது உண்மையாகவே தமிழ் பேசும் மக்களுடைய பிரதேசமான வடக்கிற்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பே உருவாகின. அந்த வகையிலே இது முதலாவது சந்திப்பு.

எங்களுடைய நாட்டினுடைய மாகாணசபையினுடைய சகல மாகாணசபை உறுப்பினர்களதும் தலைவராக , அவைத்தலைவர்களாக இருந்து கொண்டு இன்றைய நிகழ்விலே கலந்து கொள்வதையிட்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். மகிழ்வோடு வரவேற்கிறேன்.


வடக்கு மாகாணம் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டம் இந்த நாட்டினுடைய அரசியல், பொருளாதார, சமூகவியல் துறைகளில் மிகவும் தாக்கம் செலுத்துகின்ற ஒரு பிரதேசம். வரலாற்றுக்கு முன்னைய அதாவது அந்நியர்கள் இந்த நாட்டை ஆட்சிப் படுத்துவதற்கு முன்பாக இருந்து இந்த நாட்டிலே மிகப் பெரிய மூன்று அரசுகள்
இருந்தன.

பேராசிரியர் கே.எம்.டி சில்வாவினுடைய கருத்தின்படி அந்தக் காலத்திலே மிகப் பலமாக இருந்த ஒரு அரசாக யாழ்ப்பாண அரசு இருந்தது கண்டி அரசு இருந்திருக்கிறது.

இறுதியாக வீழ்ச்சியடைந்த அரசும் கண்டியரசு தான். அந்நியர்கள் அதாவது கடைசியாக பிரித்தானியர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்த பொழுது நிர்வாக வசதிக்காக 1833ல் இந்த நாட்டை ஒருங்கிணைத்து ஒரு நாடாக்கினார்கள். இன்று வரை இந்த நாடு ஒரு நாடாக, ஒரு நிர்வாகமாக இருக்கிறது.

நான் சார்ந்து நிற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய பிதாமகன் மறைந்த காந்திய வாதி என்று சொல்லக்கூடிய செல்வநாயகம் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியை 1949 டிசம்பர் மாதம் 18ம் திகதி அமுலாக்கம் செய்த பொழுது ஒரு சமஸ்டி முறையை, ஒரு கூட்டாட்சி முறையை கோரினார். அந்த முறைமையை 1926ம் ஆண்டிலேயே அமரர் பண்டாரநாயக்க அவர்கள் பிரேரித்திருந்தார்.

ஆனால், தமிழ் மக்கள் அப்பொழுது அதற்கு உடன்படவில்லை. இவ்வாறான எங்களுடைய அரசியல் மாற்றங்கள் தோற்றப்பாடுகள் முன்மொழிவுகள் எல்லாம் நடந்தேறினாலும் இப்பொழுது நாங்கள் இருக்கிற ஒரு சந்தியில் ஒரு தேசிய இனப் பிரச்சினைக்கான ஒரு தீர்வை நோக்கி நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

இதில், இருக்கக்கூடிய அவைத்தலைவர்கள் மிகப் பொறுப்பானவர்கள் ஒவ்வொரு அவையை வழி நடத்துகின்றவர்கள் செல்வாக்கு உள்ளவர்கள்.

இது எட்டாவது மாநாடு. ஒரு மாநாட்டை தவிர ஏனைய ஏழு மாநாடுகளிலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அவர்களுடைய அன்பும் அவர்கள் எனக்கு மதிப்பும் மிகவும் பாராட்டத்தக்கது. நான் உளமார நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.

உண்மையாக நாங்கள் எதிர்பார்ப்பது எல்லாம் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசியலமைப்பு மாற்ற நடைமுறையிலே எங்களுடைய தெற்கத்தேய அரசியல் வாதிகள் எந்தக்கட்சியாக இருந்தாலும் சரி, UNPஆக இருந்தாலும் சரி, SLFP ஆக இருந்தாலும் சரி எந்த ஒரு கட்சிக்கும் நாங்கள் எதிராவனவர்கள் அல்ல.

ஆகையால் தான் தந்தை S.J.V செல்வநாயகம் அவர்கள் 1957ம் ஆண்டு மறைந்த பிரதமர் SWRD பண்டாரநாயக்க அவர்களுடன் உடன்படிக்கை கைச்சாதிட்டார். அதன் பின்பு 1965ம் ஆண்டு டட்லி சேனநாயக்க அவர்களுடன் ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டது. அரசு அரசு தான்.

முன்பிருந்த அரசாங்கமோ அல்லது தற்பொழுதுள்ள அரசாங்கமோ எதிர்காலத்தில் நிறுவப்படப்போகும் அரசாங்கமோ எதுவாக இருந்தாலும். எங்களுக்கான பிரச்சினைக்கு தீர்வினை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். தற்போதைய சூழ்நிலை அடுத்த தலைமுறைக்கு நாம் கொண்டு செல்வதற்கு இடமளிக்கக் கூடாது.

ஒரு சுமுகமான ஒரு நியாயமான இந்தப் பிரச்சினை இனிமேலும் தொடராதிருப்பதற்காக ஒரு வழிவகைகளை காண்பதற்கு நாங்கள் எல்லோரும் ஒன்றாக ஒத்துழைத்து உயர வேண்டும்.

அதற்கு குறிப்பாக இந்த அரசாங்கமும் கூட்டு எதிரணியும் ஒத்துழைப்புத் தரவேண்டுமென்று மிகப் பணிவோடு கேட்டுக்கொண்டு என்னுடைய உரையை நிறைவு செய்கின்றேன்.