மன்னார் கலவரம்! 8 சந்தேக நபர்களும் விளக்கமறியலில்

Report Print Ashik in சமூகம்

மன்னார் கரிசல் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 8 பேரையும் எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இன்று உத்தரவிட்டார்.

மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மன்னார் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை(6) காலை 10 மணியளவில் கரிசல் புனிதகப்பலேந்தி மாதா ஆலய காணி எல்லைகள் இடப்பட்டு சுற்று வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மன்னார் கரிசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய காணிக்கு சுற்று வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் நீதிமன்ற பதிவாளர் குறித்த இடத்தில் இருந்து சென்ற சில நேரத்தில் பெரிய கரிசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக இடையூறுகளை மேற்கொண்டு வந்ததோடு, அமைக்கப்பட்ட சுற்று வேலிக்கான தூண்களை கடமையில் இருந்த பொலிஸார் முன்னிலையில் உடைத்து சேதப்படுத்தினர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (7) மதியம் குறித்த காணிக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் பெரிய கரிசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் திரண்டு வந்து குறித்த காணிக்கு போடப்பட்டிருந்த ஏனைய வேலித்தூண்களை உடைத்ததோடு, அப்பகுதி மக்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்ததாக கரிசல் கிராம மக்கள் தெரிவித்தனர்.

எனினும் சுற்று வேலிக்கான தூண்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை சம்பவ இடத்தில் கடமையில் இருந்த பொலிஸார் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கரிசல் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குச் சென்ற குறித்த நபர்கள் வீட்டின் பின்புறம் சென்று வீட்டு அறை ஒன்றிற்கு தீ வைத்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த வீட்டின் அறை ஒன்றினுள் காணப்பட்ட பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

இதனால் கடந்த சில தினங்களாக கரிசல் கிராமத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கும், பெரிய கரிசல் கிராமத்தைச் சேர்ந்த முஸ்ஸீம்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது.

நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட பெரிய கரிசல் கிராமத்தை சேர்ந்த சிலரை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கரிசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

எனினும் திருப்பலி இடம்பெற்றுக் கொண்டிருந்த போது ஆலயத்தின் மீது இனம் தெரியாத நபர்கள் கற்களினால் எரிந்து தாக்குதல்களை மேற்கொண்டனர்.

இதனால் திருப்பலியில் கலந்து கொண்ட மக்கள் மத்தியில் கோப நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

உடனடியாக கரிசல் கப்பலேந்தி மாதா ஆலய பகுதிக்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பெரிய கரிசல் கிராமத்தைச் சேர்ந்த சந்தேக நபர்களில் மூன்று பேர் கடந்த 10ம் திகதி திங்கட்கிழமை மாலை மன்னார் பொலிஸ் ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்கள் மீது மூன்று பிரிவுகளில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும் ஏனைய சந்தேக நபர்களை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது குறித்த நபர்களையும் இன்று திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

குறித்த 5 சந்தேக நபர்களையும் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த மேலும் 3 சந்தேக நபர்கள் இன்று திங்கட்கிழமை நீதவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தினர்.

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் 8 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.