காணாமல் ஆக்கப்பட்டவர்களை அரசாங்கம் மறந்தாலும் ஐ.நா மறக்கவில்லை: ஜோசப் கிங்சிலி ஆண்டகை

Report Print Ashik in சமூகம்

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து இலங்கை அரசாங்கம் மறந்து போனாலும், ஐ.நாவில் உள்ள மக்களும், அதிகாரிகளும் அதனை மறக்கவில்லை என மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும், மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த 'மறைக்கப்பட்ட மனிதர்களின் பதிவுகள்' எனும் பெயரில் நூல் வெளியீட்டு விழா இன்று காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் வெளியீடு செய்யப்பட்டது.

இதன் போது குறித்த நூலினை உத்தியோகபூர்வமாக வெளியீடு செய்து வைத்த பின் உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து இலங்கை அரசாங்கம் மறந்து போனாலும், ஐ.நா வில் உள்ள மக்களும், அதிகாரிகளும் அதனை மறக்கவில்லை.அவர்கள் அனைத்து விடயங்களையும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.

சொன்னவற்றை எல்லாம் இலங்கை அரசாங்கம் செய்கின்றார்களா என்பதனை அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த காலங்களிலே ஐ.நா சபையானது தங்களினால் பொறுமை காக்கும் அளவுக்கு பொறுத்துக் கொண்டார்கள்.

ஆனால் அளவுக்கு மிஞ்சி அமைதி காக்க மாட்டார்கள். எனவே சந்தர்ப்பம் ஏற்படும் போது அவர்களே நேரடியாக இறங்கும் கட்டம் ஏற்படலாம். அரசாங்கம் அக்கறை இன்றி செயற்பட்டால் ஐ.நா.தூதுவர் வந்து யுத்தக் குற்றச் சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். அதற்கான உரிமையும் அவர்களுக்கு உண்டு.

இன்று இதற்கான தீர்வு கிடைக்காது விட்டாலும் என்றோ ஒரு நாள் தீர்வு கிடைக்கும். நீதியை கேட்டிருக்கின்றீர்கள். வாழ்வாதாரத்தை கேட்டிருக்கின்றீர்கள். சாதாரண வாழ்வை வாழ வேண்டும் என்று கேட்டிருக்கின்றீர்கள்.

மேலும் பல அமைப்புக்கள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்ட உங்களுக்கு உதவியை செய்திருப்பார்கள். இருந்தாலும் இப்படியான ஒரு கேள்விக்கு அரசாங்கம் தகுந்த பதிலை வழங்க வேண்டும். நீதியை வழங்க வேண்டும்.

எனவே எல்லாவற்றையும் நாங்கள் பார்க்கும் போது எனது அபிப்பிராயத்தின் படி இவை ஒரு போதும் நடவாது. இலங்கை அரசாங்கத்தினால் நடக்காது. ஆனால் வேறு வழிகளில் நடக்கலாம்.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு அக்கறை இல்லை என்று கூறவில்லை. அக்கறை இருக்கின்றது. ஆனால் அவர்கள் அச்சமடைகின்றனர்.

பல்வேறு விடயங்களை அவர்கள் அறிந்துள்ள போதும் அதனை செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இவற்றில் அரசியல் கலந்துள்ளது.தங்களுடைய இராணுவத்தினரை குற்றம் சாட்டி அவர்களை காட்டிக்கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர். நாளைக்கு நாட்டில் கலவரம் வெடிக்கலாம், பூகம்பம் வெடிக்கலாம்.

நாளை அவர்கள் எங்களை காட்டிக்கொடுக்கலாம்.சிங்களவர், தமிழர் என்ன பிளவு ஏற்படும். அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவர்களின் ஆட்சிக்காலமே முடிந்து விடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும், மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த 'மறைக்கப்பட்ட மனிதர்களின் பதிவுகள்' எனும் பெயரில் நூல் வெளியீட்டு விழாவில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் பிரியதர்சன், மனித உரிமை செயற்பாட்டாளர் ரூக்கி பெர்னாண்டோ,

பாதிக்கப்பட்ட மக்களுக்கான இணைய தலைவர் மாட்டீன் டயஸ், உட்பட அருட்தந்தையர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள், காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவுகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.