இளம் கர்ப்பிணிப் பெண் படுகொலை வழக்கு: மூன்றாவது சந்தேகநபரிடம் விசாரணை

Report Print Nivetha in சமூகம்

யாழ். ஊர்காவற்துறையில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் மூன்றாவது சந்தேகநபர் ஒருவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு இன்றைய தினம் (17) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் ஆர்.சபேசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, கர்ப்பிணித் பெண் படுகொலை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

புங்குடுதீவைத் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரிடமே இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதன்போது, சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்களில் வழக்கிற்கு சம்பந்தப்படாத பொருட்களை அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கவும் பொலிஸார் அனுமதி கோரியுள்ளனர். இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய சந்தேகநபர் ஒருவரின் 35,370 ரூபா பணமும் அவருடைய தேசிய அடையாள அட்டை மற்றும் பணப்பை ஆகியவற்றை நீதவான் முன்னிலையில் சந்தேகநபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த சந்தேகநபரின் 110 ரூபா பணத்தையும் அவரின் தேசிய அடையாள அட்டையையும் பொலிஸார் ஒப்படைத்துள்ளதுடன், வழக்கு விசாரணையை எதிர்வரும் 31ம் திகதிக்கு பதில் நீதவான் ஆர். சபேசன் ஒத்திவைத்துள்ளார்.