குரங்குகளின் தொல்லை: அவதியுறும் கிளிநொச்சி மக்கள்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பளை நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குரங்குகளுடைய தொல்லை அதிகளவில் காணப்படுகின்றது.

இதனைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அண்மையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக கட்டடத்திற்குள் புகுந்த குரங்குகள் அலுவலக பொருட்களையும் சேதமாக்கியுள்ளது என பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் பொதுமக்களின் வீட்டிற்குள் நுழைந்த குரங்குகள் பல பெறுமதியான பொருட்களை சேதமாக்கி வருவதுடன் பெண்கள் சிறுவர்களையும் அச்சுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதனைக் கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த கலந்துரையாடலில் வனஜீவராசிகள் திணைக்கள தரப்பினர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.