கிளிநொச்சியில் வாழ்வாதாரத் திட்டத்திற்கு 300 பயனாளிகள் தெரிவு

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதாரத் திட்டத்திற்கு 300 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்கு பல்வேறு திட்டங்களினுடாக வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மீள்குடியேற்ற அமைச்சினுடைய தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவித்திட்டங்களுக்கு 300 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்பிற்கு 171 பயனாளிகளுக்கும், விவசாய செய்கைகளுக்காக 39 பயனாளிகளுக்கும், சுயதொழில் முயற்சிகளுக்காக 78 பயனாளிகளுக்கும், சிறுவியாபார அபிவிருத்தி வேலைகளுக்காக 11 பயனாளிகளுக்கும், குடிசைக் கைத்தொழிலுக்காக 01 பயனாளிக்குமென மொத்தமாக 300 பயனாளிகளுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மீள்குடியேற்றத்தின் பின்னர் விவசாய உதவிகளுக்காக 4 ஆயிரத்து 75 குடும்பங்களுக்கும், கால்நடை வளர்ப்பிற்காக 5 ஆயிரத்து 365 குடும்பங்களுக்கும், மீன்பிடித் தொழிலுக்காக 175 குடும்பங்களுக்கும், கைத்தொழில் முயற்சிகளுக்காக 1921 குடும்பங்களுக்கும் இந்த வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் கீழ் 200 பயனாளிகளுக்கு தலா ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கான செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.