போராளிகளின் அவல நிலமைக்கு கருணா தான் காரணம்!

Report Print Nesan Nesan in சமூகம்

கருணா ஆயுதத்தோடு வந்து எவ்வளவோ மக்களை அழித்தவர். இன்று இந்த போராளிகள் இந்த நிலைமைக்கு இருப்பதற்கு காரணம் கருணா தான் என புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார்.

காரைதீவு விபுலானந்தா மணிமண்டபத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

எமது ஒன்றியம் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் முன்னாள் போராளிகளை மையப்படுத்தி 3 மாத காலத்திற்குள் ஒன்றியத்தை உருவாக்கி இருக்கின்றோம்.

அம்பாறை மாவட்டத்தில் முதன் முறையாக வருகை தந்து முன்னாள் போராளிகள், போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மாவீரர் குடும்பங்களை சந்தித்திருக்கின்றோம்.

எமது மக்கள், போராளிகள் படும் துன்ப துயரங்களை எமது ஒன்றியம் மூலம் வெளி உலகிற்கு தெரியப்படுத்தி வாழ்வாதாரத்தினை பெறுவதற்காக உழைத்து வருகின்றோம்.

இந்த வாழ்வாதாரத்தை புலம்பெயர் அமைப்போ, அரசாங்கமோ, ஏனைய நிறுவனங்களோ உதவிகளை செய்ய முன்வர வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது அவயங்களை இழந்த போராளிகளை குறிப்பாக பெண் போராளிகளை புலம் பெயர் அமைப்புக்கள் கண்ணெடுத்து பார்க்க வேண்டும்.

புணர்வாழ்வு அளிக்கப்பட்டு இன்று எத்தனையோ போராளிகள் வாழ்கின்றார்கள். இவர்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வர வேண்டும்.

எமது ஒன்றியத்தின் விரிவாக்கல் நிகழ்வில் இன்று நாங்கள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள போராளிகள், மக்களை சந்திக்கின்றோம். அடுத்ததாக யாழ்ப்பாணம், மலையகம் போன்ற இடங்களில் உள்ள போராளிகளை மிக விரைவாக சந்திக்க இருக்கின்றோம்.

தலைவரால் சேகரிக்கப்பட்ட பணம் இன்று வெளிநாடுகளில் தேங்கிக் கிடக்கிறது. அதனை கொண்டு எமது மக்களுக்கான செயற்பாடுகளை விரிவுபடுத்தினால் சிறப்பாக இருக்கும்.

இப்போதைய சூழ்நிலையில் எங்கு என்ன குற்றச்செயல்கள் நடக்கிறதோ அதற்கு முன்னாள் போராளிகளின் தலையீடு உள்ளதாக தமிழ் அரசியல் வாதிகள் கூட கூறி வருகின்றார்கள்.

ஒட்டு மொத்தமாக சொன்னால் உலகத்திற்கே தெரியும் விடுதலைப் புலி அமைப்பானது கட்டுக்கோப்புடன் வாழ்ந்தது என்பது. எனவே எமது போராளிகள் எது விதமான குற்றச் செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள் என்பதனை உறுதியாக கூற முடியும்.

யார் ஈடுபடுகின்றார்கள் என்றால் சில அரசியல்வாதிகள் தங்கள் வேலைக்காக சில குற்றங்களை செய்து விட்டு எமது போராளிகள் குற்றத்தை எற்றுக்கொள்ளும் அளவிற்கு செயற்படுகின்றார்கள்.

முன்னாள் போராளிகள் குற்றம் செய்து நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்க வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஆனால் அனைத்து போராளிகள் மத்தியிலும் ஒரு அச்ச உணர்வினை யாரும் எற்படுத்த முயற்சிக்க வேண்டாம்.

நாங்கள் அரசியல் ரீதியாக புனர்வாழ்வு அழிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் என்ற அரசியல் கட்சியை தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்திருக்கிறோம்.

ஆனால் தற்போதைக்கு அரசியலை முன்னெடுக்கும் நோக்கத்தினை தற்காலிகமாக கைவிட்டு இருக்கின்றோமே தவிர முற்றுமுழுதாக இல்லை.

முதற்கட்ட நடவடிக்கையாக மக்களின் வாழ்வாதாரத்தினை பெற்றுக் கொடுப்பதே எங்களின் முதல் நோக்கமாக கொண்டு செயற்பட்டு வருகின்றோம்.

தமிழ் மக்களுக்கான துரோகத்தை செய்து விட்டு துரோகம் செய்யவில்லை என யாரும் சொல்லக்கூடாது. எம்மவர்கள் செய்த துரோகத்தினால் தான் எமது இனம் இன்று இப்படி பின்தள்ளப்பட்டிருக்கின்றது.

இதனை உணர்ந்தாவது இனிமேல் யாரும் எமது இனத்திற்கு துரோகம் செய்ய ஒரு காலமும் நினைக்கக்கூடாது என்பதுதான் எமது நிலைப்பாடு.

மாவீரர் என்று கூறுபவர்கள் விலை மதிக்க முடியாத சொத்துக்கள். உலகத்திலே தமிழர்கள் இலங்கையில் இருக்கின்றார்கள் என்பதனை காட்டியவர் எமது தலைவர்.

கருணா திருகோணமலையில் வைத்து கூறுகின்றார், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளுக்கு திரும்பவும் புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று. இவர் கூறுவது வேதனையான விடயம்.

இதனை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது, நாங்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு ஆயுதம் மௌனிக்கப்பட்டதன் பின்பு வந்தோம்.

அவ்வாறென்றால் கருணா ஆயுதத்தோடு வந்து எவ்வளவோ மக்களை அழித்தவர். இன்று இந்த போராளிகள் இந்த நிலைமைக்கு இருப்பதற்கு காரணம் கருணாதான் என அவர் தொடர்ந்தும் தெரிவித்திருந்தார்.