நல்லூர் உற்சவத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு நற்சான்றிதழ்கள்

Report Print Sumi in சமூகம்

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் தனிபட்ட பதிவேடுகளில் நற்சான்றிதழ் பத்திரம் வழங்கப்படவுள்ளதாக வட மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் றொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்பு மிக்க யாழ். நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த மாதம் 28ஆம் திகதி கொடியேற்றப்பட்டு தொடர்ந்து 25 நாட்கள் திருவிழா இடம்பெற்றது.

இதன்போது, 600 இற்கும் மேற்பட்ட பொலிஸார் ஆலயத்தின் உள்வீதி, வெளிப்புறம் மற்றும் வீதித்தடைகளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், வருடாந்த உற்சவத்தின் இறுதி நாளான இன்றைய வைரவர் உற்சவத்தில் பொலிஸாரினால் விசேட பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இன்றைய பூஜை வழிபாடுகளின் போது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸாருக்கு ஆலய நிர்வாகத்தினர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

குறித்த பூஜை வழிபாடுகளின் போது வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் றொஷான் பெர்னாண்டோ, யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, விசேட பூஜை வழிபாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் றொஷான் பெர்னாண்டோ,

கடந்த 25 நாட்களாக நடைபெற்ற நல்லூர் கந்தன் உற்சவத்தில் 600 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தார்கள்.

இந்த 25 நாட்களிலும் எந்தவிதமான குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை, எனவே கடமையில் ஈடுபட்ட அனைத்து பொலிஸாருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் முன்னிலையில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நீங்கள் சிறப்பான கடமையில் ஈடுபட்டமைக்கு நன்றியை தெரிவிக்கின்றேன், நீங்கள் சிறப்பாக கடமையை செய்தமைக்காக உங்களது தனிப்பட்ட பதிவேடுகளில் ஒரு நற்சான்றிதழ் பத்திரம் ஒன்றை வழங்கவும் உத்தேசித்துள்ளேன்.

எனவே கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் அனைவருக்கும் அந்த நற்சான்றிதழ் நன்மை பயக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ஆலயத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு ஆலய அறங்காவலர் சபையின் தலைவரும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

ஆலய உற்சவத்தின் போது எந்தவித அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை எனவும் பொலிஸாரின் திறமையான செயற்பாடுகளே இதற்குக் காரணம் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.